பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

57


பவம். உருவவாதிகள் (formalists), இருப்புவாதிகள் (Existentialists) உருவத்தையே முதன்மைப்படுத்தினார்கள். வேகமான மாறுதல்களைக் காணும் இவ்வுலகத்தின் நிகழ்ச்சிகளை உள்ளடக்கமாகக் கொள்ளவில்லை. மனித வாழ்க்கையின் புரட்சிகரமான மாறுதல்களைச் சித்தரிக்க அவர்கள் தங்கள் கலைத் திறனைப் பயன்படுத்தவில்லை. நீரற்ற நிலம் போல அவர்கள் படைப்புத் திறன் வறண்டுபோய்விட்டது. காப்கா போன்றவர்கள் விருப்பமின்றியே வால்ட் விட்மன் படைப்பு முறைக்குத் திரும்ப வேண்டியுள்ளது. சமூக ஆய்வும் மனிதநேசமும் இன்றைய இலக்கியத்தில் வெற்றி பெற்றுவருகின்றன. உருவ வாதம் தோற்றுப் பின்வாங்குகிறது.

கலைப் பண்பாடு

(அழகியல்)

எல்லாக் கலையுருவங்களின் மொத்த விளைவே கலைப் பண்பாடு எனப்படும். பலவகையான கலையுருவங்கள் ஏன் இருக்கின்றன? இவ்வினாவிற்கு வெவ்வேறு தத்துவ அறிஞர்கள் வெவ்வேறு விதமாகப் பதிலளித்தார்கள்.

லெஸ்ஸிங் என்பவர் பின்வருமாறு எழுதினார்:

உள்ளத்தில் பிரதிபலிக்கும் பொருளின் தன்மையால் அகப் பிரதிபலிப்பை வெளியிடும் கலையுருவம் வேறுபடுகிறது. யதார்த்தத்தின் வெவ்வேறு அம்சங்களை வெவ்வேறு கலை யுருவங்கள் வெளியிடத் தகுதி பெற்றவையாக உள்ளன.

கலைப்பொருளின் பல கூறுகளை வெளியிடப் பல்வேறு கலை உருவங்கள் அவசியமென்று இவர் கருதினார்.

ஹெகல் கலைப்படைப்பு, அழகியல் ஆகிய பொருள்கள் பற்றித் தமது தத்துவத்தில் விவாதித்தார்.
அகவயப் பிரதிபலிப்பிலிருந்து தொடங்கி அவர் கலை உருவங்களின் தன்மைகளை ஆராய்ந்தார். வளமான வேறுபாடுகளுக்குக் காரணம் முழுமுதல் (கடவுள், absolute) என்றவர் கருதினார். முழுமுதல் தன்னைக் கட்டிப்போட்டிருக்கும் பொருள்மயமான சிறையிலிருந்து விடுபடும் முயற்சிகளின் விளைவுகளே, வெவ்வேறு கலை உருவங்களுக்குக் காரணம் என்று கருதினார். சிற்பம், ஓவியம், கட்டிட அமைப்புக்கலை ஆகிய உருவ வேறுபாடுகளுக்குக் காரணம் முழுமுதலின்