பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

நா.வானமாமலை


தொடங்கினான். காடுகளில் கிடைத்த காய்கனிகளைப் பறித்து உண்ட மனிதன், பழமரங்களை நட்டு வளர்க்கக் கற்றுக் கொண்டான், வேட்டையாடி விலங்குகளைக் கொன்ற மனிதன், அவற்றின் இறைச்சியை உணவாகவும் தோல், கொம்பு, குளம்பு, ரோமம் முதலிய பகுதிகளை உடை, கலங்கள், சீப்பு போன்ற பயன்படும் பொருள்களாகவும் மாற்றிக் கொண்டான்.
ஆயினும், இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் என்ன, ஓர் இயற்கை நிகழ்ச்சி ஏன் இப்படி நடைபெறவேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை காணவில்லை. இயற்கையின் இயக்கங்களுக்கும் இயற்கைப் பொருள்களின் இயல்புகளுக்கும் அடிப்படையான அறிவியல் விதிகளை அவன் அறிந்துகொள்ளும் காலம் இன்னும் தோன்றவில்லை.

சடங்கும் மந்திரமும்
இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் தனது செயல்களுக்கும் தொடர்பு இருக்கும் என்று அவன் யூகித்தான். தனது விருப்பமும் செயல்களும் இயற்கையைத் தான் விரும்பும் திசையில் செலுத்தும் என்று நம்பினான். விருப்பத்தைச் சொற்களால் வெளியிட்டான். விரும்பியதுபோல இயற்கையைச் செயல் புரியச்செய்ய, தான் சில செயல்களைப் புரிந்தான். உதாரணமாக மழை வேண்டுமென்று விரும்பினால் மலைமீது ஏறிநின்று கொண்டு, வெள்ளை நிறமான தானியங்களைத் தன் தலைக்கு மேல் எறிந்தான். இது செயல். இதனை மானிடவியலார் ritual lite என அழைக்கிறார்கள். பிறகு விருப்பத்தைச் சொல்லால் வெளியிட்டான். 'மழையே வருக! மழை மேக்குயர்க' என்று எல்லோரும் சேர்த்து கூவினார்கள். இது, மந்திரம் (magical chart). இவ்வாறு கூட்டு விருப்பத்தைச் சடங்கு, மந்திரம் ஆகிய இரு செயல்-சொல் கூட்டால் வெளியிட்டார்கள். இது பயன் விளைவிக்கும், மழை பெய்யும் என நம்பினார்கள்.
இயற்கையில் கிடைக்கும் கிழங்குகளைத் தேடி மனிதன் சென்றான். கிடைக்குமிடத்தில் தோண்டிப் பெற்றான். இது உணவு தேடலாகும். சில கற்கருவிகளைச் செய்யத் தெரிந்து கொண்ட பின் இயற்கையில் கிடைக்கும் கிழங்கை எளிதில் அகழ்ந்து பெற்றான். இதன் பின் அதனைத் தானே குழிதோண்டிப் புதைத்து, பல கிழங்குகளைப் பெறலாம் என்றறிந்து பண்டைய பயிர்த்தொழிலைப் படைத்தான். இச்செயல்களுக்குக் காரணகாரியத் தொடர்பை அவன் அறிய இயலவில்லை. எனவே 'சடங்கு-மந்திரம்' என்ற செயல், சொல்.