பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



— 34 —

மாந்தர் கண்டு களிப்பதோடு நில்லாது, அறிவுடைக் கேட்போராகவும் (critical audience) விளங்கினர். இக்கண் கொள்ளாக் காட்சியினைக் கன்னித் தமிழ் பாடிய கபிலர் கவியோவியமாகத் தருகிறார். அது வருமாறு :

'ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கினை
கோடை அவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசை
தோடு அமை முழவின் துதைகுரல் ஆகக் கணக்கலை
இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டுயாழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல் அவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து இயலி ஆடும்மயில்
விழவுக் களவிறலியில் தோன்றும்.'

இதன் மூலம், இயற்கையில் பாட்டுண்டு, கூத்துண்டு, முழவுண்டு, குழலுண்டு, எல்லாம் உண்டு என்று புலவர் உணர்த்தியிருப்பது நம் உள்ளத்தை எல்லாம் கொள்ளை கொள்ளுகின்றது. அடுத்து ஆடும் மயிலின் மாண்பினைக் காண்போம்.

அழகான தோகையும், சாயல்மிக்க நடையும் உடைய மயில் வேங்கை மரத்தில் தங்கி பாறைகளில் முட்டையிட்டுத் தினைக் கதிரை உண்டு திரியும் என்று இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. நீல வண்ணமுடைய எழில் மிக்க கழுத்தையும், அழகிய பீலியையும், நீல மணிபோன்ற புள்ளிகளையும், குடுமியையும் உடைய மயில், கற்பாறை மீதமர்ந்து தன் கூட்டத்தோடு காலை இளம்பரிதியின் வெப்பத்தைத் துய்க்கும் காட்சியும், சோலையில் சென்று உலவும் காட்சியும், இனிய தீங்குரல் எழுப்பி தாளம்