பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
– 37 –

மயிலிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு (ரோம், எகிப்து, யவன நாடுகள்) அன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. கடையேழு வள்ளல்களில் ஒருவனை பேகன் வரலாற்றில் இடம் பெற்றதற்குக் காரணமாக இருந்தது மயிலே அருளுணர்வுடைய பேகன் குளிர்காலத்தில் தோகை, விரித்து ஆடிய மயிலினைக் கண்டு இரங்கி அது குளிரால் வாடி ஆடுகின்றது என மனத்திலே கொண்டு அதனது குளிரை நீக்குதற் பொருட்டுத் தன் பொன்னுடையைப் போர்த்திப் புகழ் பெற்றனன் அன்றோ! 'மயிலே, மயிலே, இறகு போடெனில் போடுமா' என்று தமிழ்நாட்டில் வழங்கும் பழமொழி, தானே கனியாத செயலை நாமே முயன்று கனிவிப்பதே முறை என்ற உண்மையை உணர்த்துகின்றது.

கொஞ்சு மொழி அஞ்சுகம்

கொஞ்சு மொழி அஞ்சுகம் மயிலைப் போன்றே குறிஞ்சி நிலத்திற்குரிய பறவையாகும். பேசும் திறமும், அழகும், சிவந்த வளைந்த கூரிய அலகும், கழுத்தில் அழகிய கருவளையமும், மென் குரலும் உடைய இப்பறவையினை மங்கையர் கூட்டிலடைத்து வீட்டில் வளர்த்து மகிழ்வர். இதனது பசுமை வண்ணமும், செக்கச் சிவந்து விளங்கும் வாயும், இனிய குரலும் இன்பத்தைத் தருவனவாகும். பசுமை நிறக் கிளி தவிர, வெண்ணிறக் கிளியும், ஐந்து நிறக் கிளியும் உள்ளன. இவைகள் தோட்டங்கள், வயற் பகுதிகளில் விளைந்து காணும் கதிர்களைக் கொணர்ந்து உண்ணும். பைந்தமிழ் நாட்டுப் பாவையர் பண்டு தினைப் புனம் சென்றது, அதனை நாடிவரும் கிளிகளை ஓட்டுதற்கே. கிளிகள் புனத்தில் பெடையோடு கீச்சுக்கீச்செனக் கூவிச் சுற்றித் திரிந்து கதிர்களைக் கவரும். தினைப் புனம் காக்கும் கன்னியர் பாட்டுப்பாடி கிளியோட்டுவர். அவரை

3