பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 6 -

யாத்துத், தந்துள்ளனர். பொதுவாக இத்தன்மை புலவர் யாவருக்கும் அமையினும் சிறப்பாகத் தமிழ் மக்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாய், ஊக்கத்தின் உறைவிடமாய், உண்மை கருத்துக்கள் பலவற்றை நவில்வனவாய், தமிழ்மணம் வீசும் சங்க இலக்கியங்களைச் சமைத்த நாவீறு படைத்த நல்லிசைப் புலவர் பெருமக்களும் சொல்லிசை வாய்ந்த மெல்லியரும் விலங்குகளையும் பறவைகளையும் சிறப்புடன் விளித்து, பல சுட்டி, பல வருணித்து, பலவற்றில் அவற்றின் வாழ்க்கையை குறித்துப் பாடியுள்ளனர்.

தமிழ் நாட்டில் இயற்கையை மறந்து எவரும் வாழவே முடியாது. தமிழ்ப் புலவர்கள் இயற்கையை நுணுகி ஆய்ந்து, பின்னர்த் தமிழ் நாட்டு நிலத்திற் கேற்ப விலங்கு-பறவை வரையறை செய்து ஒழுங்குடன் பாடியுள்ளனர். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன ஐந்திணையாகும். இவை மலை, நாடு, காட்டுநிலம், வயற் பகுதி, கடற்கரை என நில வகையாகவும், புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என ஒழுக்க வகையாகவும் அகப்பொருளில் முறையே பொருள்படும். அகப் பொருளுக்குரிய கருப்பொருள்கள் பதினான்கினுள் விலங்கும் பறவையும் அடங்கப்பெறும். முன்னாள் ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ப, பறவை-விலங்குகளை வரையறை செய்திருந்த வகையினை அடுத்த பக்கத்தில் தரப்பட்டிருக்கும் அட்டவணை நன்கு எடுத்துக்காட்டும்.

விலங்குகள் - பறவைகளைப்பற்றிப் பாடியிருக்கும் புலவர்களின் கற்பனைத் திறனை முன்று வகையாகப் பிரிக் கலாம். அவை, முறையே, அவைகளின் வாழ்க்கையை அப்படியே காட்டுதல், மனித வாழ்க்கையின் நிகழ்ச்சியை அவற்றிற்கு ஏற்றிக் காட்டுதல், மக்கள் வாழ்வைக் காட்டுதல் என்பவை ஆகும். முன்றாவதாகிய மக்கள் வாழ்வைக் காட்டுதல் இயற்கையுடன் இலங்கி இன்பம் பயக்கும் தன்மையுடையதாய் விளங்கும்.