பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இடம் வேங்கடமலை-என்று கூறியுள்ளார். கச்சியப்பர் காலத்தில் வேங்கடம் திருமாலுக்குரிய இடமாக இருந்ததால், முருகன் முன்பு இருந்த இடம் வேங்கட மலை என்று கூறிவிட்டார். பண்டு வேங்கடம் முருகன் திருப்பதியாக இருந்திராவிடின், மற்ற ஊர்களைப் பற்றி வேறு விதமாகக் கூறிய கச்சியப்பர் வேங்கட மலையைப் பற்றி மட்டும் இவ்வாறு கூற அவருக்குப் பைத்தியமா என்ன? எனவே, வேங்கட மலை முருகன் மலை என்பதற்குக் கந்த புராணத்தில் இலக்கியச்சான்று உள்ளமையை உணரலாம்.

கந்த புராணத்தை ஒட்டி தி. சு. வேலு சாமிப் பிள்ளை இயற்றிய 'கந்தபுராண வெண்பா' என்னும் நூலிலும் இச்செய்தி கூறப்பட்டுள்ளது. பாடல் வருமாறு:

"மன்னன்னை யோடுமுனி வாகித்தன் வெற்பொரீஇக்
கொன்னதத்தe டேகிக் குகைவழியே-முன்னம்
வருவேல் கடமாம் வரைகண்டான் அன்பாம்
குருவேங் கடமாங் குசன்"

(உற்பத்தி காண்டம்–வழிநடைப் படலம்–6)

என்பது பாடல். இச்செய்தியை அடியொற்றித்தான் அருணகிரி நாதர் 'குகை வழி வரு வேங்கட கிரி' என்றார்.

ஆனால், கந்த புராணம் சிலப்பதிகாரத்திற்குப் பிற்பட்டது; எனவே, இன்னும் முற்பட்ட இலக்கிய ஆதாரம் தேவை என்பது கோபாலய்யரின் கூற்று. சரி, மேலும் பார்ப்போம்:

தொல்காப்பியப் பாயிரம்

தமிழில் இப்போது கிடைத்திருக்கும் நூல்களுள் தொல்காப்பியமே பழமையானது–முதன்மையானது.