5. உலூகன்
மக்களைக் கெடுக்கும் பழக்கங்கள் பலவற்றுள் கவறாடலும் ஒன்றாகும். அதாவது சூதாடுதலும் ஒன்றாகும். இதனை விளக்க வேண்டுமென்ற கருத்தோடுதான், வள்ளுவப் பெருந்தகையார் சூது என்னும் தலைப்புங் கொடுத்து, ஓர் அதிகாரமே பாடி, இச்சூதினால், விளையக் கூடிய தீமைகளை எடுத்து விளக்கியும் உள்ளனர்.
சூதாட்டம் நமக்குப் பொருள் வருவாயை முதலில் காண்பிக்கும். அவ்வாறு பொருள் வருதலைக் கண்டு, அதில் ஈடுபட்டால் பின்னால் விளையும் பயன் மிக மிகத் துன்பமேயாகும். இச் சூதினால் வரும் சிறு பொருள் தூண்டிலில் இருக்கும் இரையை உண்ண வந்த மீன், தன் உயிரையே இழப்பது போன்றது. ஒரு பொருளைக் கருதி, நூறு பொருளை இழக்கச் செய்ய வல்லது இச் சூது. இதனால், வறியர் ஆக நேரிடும். இன்பம் அடைந்து வாழும் வழியும் ஏற்படாது. இச் சூதாட்டமானது, முன்பு இல்லாத துன்பங்கள் பலவற்றைத் தரும். சீர்மையைக் கெடுக்கும். உணவு உண்டு, வயிறு நிரம்பி வாழச் செய்யாது. பொருளை அழிவு செய்வதோடு நில்லாமல், பொய் கூறுமாறும் செய்யும். அருட் குணம் அமையப் பெறாமல் செய்யும். அந்தோ! இச் சூதினால் உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி ஆகிய இந்த ஐந்தும் அமைய மாட்டா, இவை அமைந்-