பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இலக்கியத் தூதர்கள்

வானில் விரைந்தெழுந்து பறந்தான். இடையில் அசுரர்களால் ஏற்பட்ட இடையூறுகளை யெல்லாம் வென்று சூரனது வீரமாநகரை யடைந்த வீரவாகு, வேலன் திருவடியை வாழ்த்தி வணங்கினான். அப் பெருமான் திருவருளால் ஓர் அணுவின் உருவங் கொண்டு மகேந்திர மாநகரின் வளங்களைக் கண்டு வியந்தான். சயந்தனும் வானவரும் சிறையிருந்த இடத்தைக் கண்டு சிந்தைநைந் துருகினான்.

வானவர் வாழ்த்தைப் பெறுதல்

இந்திரன் மைந்தனாகிய சயந்தனுக்கு இன்னுரை கூற எண்ணிய வீரவாகு ஆறெழுத்து மந்திரத்தை அன்புடன் ஓதினான். அவ்வேளையில் சிறைச் சாலையைக் காத்துநின்ற அசுரர் மந்திர வலையிற்பட்டு மயக்குற்றனர். உடனே, அவ் வீரவாகு சிறையினுள்ளே புகுந்து சீரிழந்து வாடும் சயத்தன் முன்னே அமர்ந்தான். தன்னக் கண்டு வியந்து நின்ற சயந்தனுக்குத் தன் வரலாற்றை எடுத்துரைத்தான். வேலன் விடுத்த தூதனாய் வந்தடைந்த சிறப்பினை விரித்துரைத்தான். அவனது மொழிகளைக் கேட்ட இமையவர் அனைவரும் மனமகிழ்வெய்தினர். ‘வேலன் விடுத்த தூதனே! நீ வெற்றி எய்துக!’ என்று வாழ்த்துக் கூறி வழியனுப்பினர்.

சூரன் அத்தாணியில் வீரவாகு

அவ்விடத்தினின்று வான் வழியே விரைந்து பறந்த வீரவாகு, சூரனது மாளிகையைச் சார்ந்த செய் குன்றின்மேல் நின்று அவனது அரண்மனை வளத்தை யெல்லாம் கூர்ந்து நோக்கினான். பின்னர் அங்கிருந்து எழுந்து, வீரனாகிய சூரன் வீற்றிருந்த அத்தாணி