பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

இலக்கியத் தூதர்கள்

தலைகளின் சிகையைப் கரத்தாற் பிடித்து நிலத்தில் அடித்தான். பின்பு சூரனை நோக்கி, “நீ என் ஆண்டவனது நெடுவேலால் மாண்டொழிவாய்; அது காறும் ஐம்புல இன்பங்களை ஆரத் துய்த்திரு; நான் போய் வருகிறேன்” என்று கூறிப் புறப்பட்டான். அப்போது அவன் அமர்ந்திருந்த அரியாசனமும் வானத்தில் எழுந்து மறைந்தது. பெருமான் அருளால் உலகளந்த திருமாலைப் போல் நெடியதோர் உருவங் கொண்டு நின்றான். அறம் திறம்பிய அசுர வேந்தன் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தைச் சின்னா பின்னமாகச் சிதைத்தான். தன்னை எதிர்த்துத் தாக்கிய அசுர வீரர்களையெல்லாம் அழித்தொழித்தான். கருங்கடல் கடந்து கந்தமாதன மலையைச் சேர்ந்த செந்திற் பதியினை வந்தடைந்தான். அன்பினால் என்பும் உள்ளமும் உருகவும், விழிகளில் ஆனந்த வெள்ளம் பெருகவும், முருக வள்ளலின் திருவடியை வணங்கினான். தான் தூது சென்று மீண்ட செய்தியைப் பணிவுடன் பகர்ந்து நின்றான்.

இங்ஙனம் வேலன் விடுத்த தூதனய்ச் சூரனது வீரமகேந்திரம் அடைந்த வீரவாகு தலைமைத் தூதனுக்குரிய தகுதிகள் பலவும் படைத்தவன் என்பதை அவன் கூறிய மொழிகளாலும், சீரிய செயல்களாலும் அறிந்து மகிழலாம்.