பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் விடுத்த தூதன்

103

காண்டத்திலும் ‘மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோர் அருவினைப்போல்’நளனைக் கலி நீங்கியதென்றும் நவில்கின்றார். ஆதலின், புகழேந்தியார் திருமால் அடியவர் என்பது தெள்ளிதிற் புலனாகும்.

புலவரைப் போற்றிய வள்ளல்

புகழேந்தியார் தம்மை யாதரித்த குறுநில மன்னனாகிய சந்திரன் சுவர்க்கி என்பானின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கியே நளவெண்பாவை யாத்தனர் என்பர். ஆதலின் செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ்ப் புலவராகிய புகழேந்தியார், தம் நூலில் அம் மன்னனைத் தக்கவாறு போற்றிப் பரவுகின்றார், மனுமுறை தவறாது செங்கோல் செலுத்திய அம் மன்னனே ‘மாமனு நூல் வாழ வருசந்திரன் சுவர்க்கி’ என்று வாழ்த்தினார். அவனது வளம் பொருந்திய மள்ளுவ நாட்டைச் சொல்லும்போது, ‘வண்டார் வள வயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான் - தண்டார் புனை சந்திரன் சுவர்க்கி’ என்று போற்றினர். அவனது கொடை நலத்தைக் கொண்டாடும் புலவர், ‘தாருவெனப் பார்மேல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும், ‘சங்கநிதிபோல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும் குறிப்பிடுகின்றார்.

நளவெண்பா அரங்கேற்றம்

கொடை வள்ளலாகிய சந்திரன் சுவர்க்கியின் அரசவையில் புகழேந்தியார் தம் நளவெண்பா நூலை அரங்கேற்றினர். அப்போது அந்திப் பொழுதின் வருணனையைக் குறிக்கும் அழகிய பாடலொன்றைப் பாடிப் புலவர் விளக்கினார்.