பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீவகன் விடுத்த தூதன்

123

மேலும், நம் அரியணை இருவர்க்கு இடங் கொடாது. நன்செய் நாடு குறித்து நீ நவின்ற சொற்கள் நினைக்குக்தொறும் நினைக்குந்தொறும் எனக்கு நகைப்பையே தருகிறது. நம் அரண்மனைக் கடைத் தலையில் அடைக்கலம் புகுந்த மன்னர் பலர் நடைப் பிணமாய்த் திரிந்துகொண்டிருத்தலைக் கண்டிலையோ ? அவர்கள் முடியும் செங்கோலும் நம் அடியில் வைத்து வாய்புதைத்து நின்று, தத்தம் மனைவியரின் மங்கல நாணை இரந்து நிற்கும் எம் அரசவை புகுந்து, நாக்கூசாமல் நன்செய் நாட்டைப் பாண்டியனுக்குத் தருக! என்று பகர்ந்த பின்னும் நீ உயிர் தாங்கி நிற்பது தூதன் என்ற ஒரே காரணத்தால் என்பதை அறிவாய்! ஆராயாது உன்னை இங்குக் தூதனுப்பிய பாண்டியன் இதுகாறும் முடியணிந்து அரசாள்வது யாரால் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் தானே உணர்வான். இதனை உங்கள் அரசனுக்கு அறிவிப்பாய்” என்று வீரமும் வெகுளியும் தோன்றக் கூறிப் பலதேவனை அனுப்பினான்.

பாண்டியன் அவையில் பலதேவன்

சேரன் அரசவையினின்று நீங்கிய தூதனாகிய பலதேவன் தன் தந்தையின் சூழ்ச்சி பலித்தது என்று மகிழ்ந்தான். நெல்லையைச் சார்ந்து சீவகன் திருமுன் சென்று வணங்கி நின்றான். அவனது முகக்குறிப்பினைக் கண்ட குடிலன் தனது சூழ்ச்சி பலித்து விட்டதெனத் தன்னுள் எண்ணி இறுமாந்தான், அதனால் அரசனுக்கு இறுதியும் தனக்கு உறுதியும் விளைவது திண்ணமென எண்ணி இன்புற்றான். பலதேவன், பாண்டியனை வணங்கி, “அரசே! சேர வேந்தன்