பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. தோழர் விடுத்த தூதர்

பெரிய புராணத்தின் பெருமை

தமிழில் தோன்றிய புராணங்களுள் பழைமையும் தலைமையும் வாய்ந்த அரிய நூல் பெரிய புராணம் ஆகும். இறைவன் திருவருள் துணைகொண்டு செயற்கரிய செயலைச் செய்து பெரியராய சிவனடியார்கள் அறுபத்துமூவரின் அருள் வரலாற்றை விரித்துரைக்கும் பெருமை சான்றது அந்நூல். முக்கட் பெருமானாகிய சிவபிரானுக்குச் செங்கதிர் வலக்கண் என்று மதிக்கப் பெறும் மாண்புடையது. தெய்வ மணக்கும் செய்யுட்களால் பத்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடப் பெற்ற பான்மையுடையது. இடைக்காலச் சோழப் பேரரசனாக இலங்கிய அநபாய குலோத்துங்கனின் அரும்பெறல் முதலமைச்சராகிய சேக்கிழார் பெருமானால் ஆக்கப்பெற்ற அருமையுடையது. இடைக்காலத்தில் எழுந்த அருந்தமிழ் இலக்கியங்களுள் சொல்நயம் பொருள் நயங்களால் இணையற்ற நூலாக இலங்குவது. தமிழகத்தின் இருண்ட கால வரலாற்றை விளக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குவது. தமிழகத்தின் ஐந்நூறு ஆண்டுச் சரிதத்தை அறிவிக்கும் வரலாற்று நூலாகவும் வயங்குவது. சைவ சமயத் தோத்திர நூல்களாம் பன்னிரு திருமுறையுள் இறுதித் திருமுறையாகத் திகழ்வது. தில்லைக் கூத்தனாகிய இறைவனே ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, அதனையே முதலாகவும் நடுவாகவும் இறுதியாகவும் கொண்டு பாடப்பெற்ற தெய்வ மாண்புடையது. ‘திருத்தொண்டர் புராணம்’ என்றும் வழங்கும் பெருமை பெற்றது.