பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. அதியமான் அனுப்பிய தூதர்

அதியமான் சிறப்பு

கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த கொடை வள்ளல்கள் எழுவருள்ளே அதியமான் நெடுமான் அஞ்சி என்பானும் ஒருவன். அவன் அதியர் என்னும் குறுநில மன்னர் குடியிற் பிறந்த சிறந்த கொற்றவன். அவன் தனது ஈகை நலத்தாலும் வீர வலத்தாலும் இணையற்று விளங்கினான். அதனால் அதியர் குடிப்புகழ் சிறப்புற்று ஓங்கியது. குடிப்பெருமையைப் பெருக்கிய அதியமானைப் புலவர் பலரும் அதியமான் நெடுமான் என்று அகமகிழ்ந்து போற்றினர்; அவனது இயற்பெயர் அஞ்சி என்பதே. அவன் மழவர் என்னும் வீரர் குலத்திற்குத் தலைவனாதலின் மழவர் பெருமகன் என்றும் அழைக்கப்பெற்றான்.

நாடும் நகரும்

சேலம் மாவட்டத்தில் இற்றை நாளில் தர்மபுரி என்று வழங்குறும் தகடூரைத் தலைநகராகக் கொண்டு அதியர் என்னும் அரச மரபினர் ஆண்டு வந்தனர். அவர்கள் சேர மன்னருடன் பேருறவு பூண்டு ஒழுகு பவராதலின் அச்சேரர்க்குரிய பனம்பூ மாலையையே தாமும் மாலையாகப் புனைந்து கொள்வர். பெறுதற்கரிய இனிமை வாய்ந்த கரும்பைப் பிற நாட்டினின்றும் முதன் முதல் தமிழகத்திற்குக் கொண்டு வந்த பெருமை இவ்வதியர்க்கு உரியதே. குதிரை மலையும் அதனைச் சூழ்ந்த கொல்லிக் கூற்றமும் இவருக்குரிய நாடாய் இருந்தன.