பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதியமான் அனுப்பிய தூதர்

33

உணர்ந்த அதியமான் அவரை அமைச்சராக ஏற்றுக் கொண்டதில் சிறிதும் வியப்பில்லையன்றோ? அதனாலேயே அவன் ஒளவையாரைச் சிறுபொழுதும் பிரிதற்கு விழைந்தானல்லன். அவர் எப்பொழுதும் அருகிருந்து அறிவுரையும் ஆறுதலுரையும் தனக்குக் கூறிக்கொண்டிருத்தலைப் பெரிதும் விரும்பினான்.

பாணர்குலப் பாவையர்

அதியமான் அவையில் அமைச்சராகவும் அரசவைப் புலவராகவும் விளங்கிய ஒளவையார் பாணர் மரபில் தோன்றிய பாவையாராவர். பாணர் குலத்தில் உதித்த மகளிரைப் பாடினியர், விறலியர் என்னும் பெயர்களால் குறிப்பர். பண்ணமையப் பாடும் இன்னிசை வல்ல மகளிர் பாடினியர் எனப்படுவர். பாணர் பாடும் பாடலுக்கேற்ப இனிதாடும் இயல்பினர் விறலியராவர். பாடினியர் தாமே பாடிக் கொண்டு ஆடும் பண்புடையாராவர்.

ஒளவையார் பரிசில் வாழ்க்கை

ஒளவையார் இளமையிலேயே ஆடலும் பாடலும் வல்ல அரிவையராய்ப் புலமை மிக்கு விளங்கினார். அவருடைய அறிவும் திறலும் கண்ட ஆடவர் ஆவரை மணஞ் செய்து கொள்ள அஞ்சினர் போலும்! அன்றித் தம் புலமையையும் திறமையையும் உலகிற்கு நன்கு பயன்படுத்த வேண்டும் என்ற அருள் உள்ளத்தால் அவர் இல்லற வாழ்வைக் கொள்ளாதிருந்தனரோ? இன்னதென அறியோம்.அவர் இளமையிலேயே துறவுநெறி பூண்டு தூய வாழ்வை மேற்கொண்டு ஒழுகினார். நல்லிசைப் புலமை மெல்லியலாராய் நாடெங்கும் சுற்றி மன்னர்களையும் வள்ளல்களையும் இன்னிசைப் பாக்களால்