பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இலக்கியத் தூதர்கள்

ணன், அவர்களை எள்ளி நகையாடினான். வலிமை மிக்க அரக்கர்கள் பலரை நோக்கி, அந்தக் குரங்கு தப்பியோடிப் போகாதவாறு அதனைப் பிடித்துக் கொண்டு வருக; கொன்று விடாதீர்கள்” என்று பணித்தான். அப்பணியினைச் சிரமேற் கொண்டு அனுமனை எதிர்த்த அரக்கர் தலைவர் பலர் அழிந்தொழிந்தனர். இறுதியில் இராவணன் மகனாகிய இந்திரசித்து அனுமனை எதிர்த்தான். அவனும் தன்னுடன் வந்த படையெல்லாம் அழிந்தொழியத் தனது தேருடன் விண்ணில் நெடுந்தொலை சென்றான். அங்குநின்று பேராற்றல் வாய்ந்த நான்முகக் கணையினைச் செலுத்தி, அனுமன் தோள்களை இறுகக் கட்டினான்.

கட்டுண்ட அனுமன், இராவணனைக் காண்டல்

அதனால் கீழே சாய்ந்த அனுமன் அக்கட்டினை யறுத்துக்கொண்டு எழவல்ல ஆற்றலுடையனாயினும் நான்முகக் கணையின் தெய்வத்தன்மையை இகழ்ந்து அகலுதல் தகாது என்று எண்ணினான். செயலற்றவனைப் போல் கண்களை மூடிக்கிடந்த அவனது ஆற்றல் அழிந்துவிட்டதென்று நினைந்து இந்திரசித்து அவனை நெருங்கினான். அரக்கர்கள் அவனைப் பிணித்துள்ள கயிற்றைப் பற்றித் தெரு வழியாக இழுத்துச் சென்றனர். இந்திரசித்தும் அனுமனோடு இராவணன் அரண்மனை யடைந்தான். இராவணனுக்கு அனுமனைச் சுட்டிக்காட்டி, “குரங்கு வடிவமாக இருக்கும் இப்பேராண்மையாளன் திருமாலைப் போலவும், சிவபிரானைப் போலவும் வீரம் வாய்ந்தவன்” என்று கூறிக் கைகூப்பி வணங்கினான். அது கேட்ட இராவணன் மிகுந்த சினத்துடன் அனுமனை