பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

இலக்கியத் தூதர்கள்

கண்ணன் தூதுவந்த செய்தியை ஓதுதல்

கண்ணனின் கட்டுரையைக் கேட்ட கண்ணிலான் மகனாகிய துரியோதனன் நகைத்தான். ‘நீ தூது வந்த செய்தி யாது?’ என்று வினவினான். “சூதினால் அரசிழந்த நின் துணைவராகிய பாண்டவர் நீ சொன்ன சொல் தவறாத வண்ணம் பகைவர்களைப்போல் காட்டிற்குச் சென்று குறித்த காலத்தைக் கழித்து மீண்டுள்ளனர்; இனி அவர்கட்குரிய நாட்டை நட்புடன் கொடுப்பதே அறமாகும்; அங்ஙனம் செய்தால் பிற அரசர்களும் உன்னை உவந்து போற்றுவர்; மறுப்பாயானால் அஃது அறமன்று; ஆண்மையும் அன்று; புகழும் அன்று” என்று அருளோடு கண்ணன் அறவுரை கூறினான்.

துரியோதனன் மறுப்புரை

கண்ணன் மொழிகளைக் கேட்ட துரியோதனன் கடுஞ்சினத்துடன் பேசத் தொடங்கினான். இப் பாண்டவர் அன்று சூதாடித் தம் உரிமையெல்லாம் இழந்து வனம் புகுந்தனர்; இன்று அவ்வுரிமைகளை நீ சூழ்ச்சியாகக் கவர நினைத்தால் நான் அவரினும் எளியனோ? அவர்கள் இன்னும் காட்டில் சென்று திரிவதே உறுதியாகும் ; நீ என்னை வெறுத்தால் என்ன ? இங்குள்ள அரசர்கள் திகைத்தால் என்ன ? மறைவாகச் சென்று நகைத்தால்தான் என்ன? உண்மை பொய்த்துப்போய்விட்டது என்று தேவர்கள் கூறினால் என்ன ? பாண்டவர் என்னுடன் மாறுபட்டுப் போரைத் தொடங்கினாலும் என்ன? ஈ இருக்கும் இடங்கூட இனி நான் அவர்கட்குக் கொடுக்கமாட்டேன்” என்று கூறினான்.