பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363


பாடியுள்ளமை கொண்டும் காந்தளை மூன்று வகையாகக் கொள்ள வேண்டும். எவ்வாறு வேறுபடுத்திக் காண்பது? இதற்கு இம்மூன்று சொற்களையும், அவற்றின் பொருள் நிலைகளையும், புலவர்கள் காட்டிய உவமைகளையும் விரித்துக் காணவேண்டும். அதற்குமுன்னர் இப்பூவின் பொது அமைப்பை அறிதல் இன்றியமையாதது. தலைகீழ் மலர்ச்சி காந்தள் எழிலை ஏந்தி நிற்கும் மலர்க்குமரி. வண்னக் கலவையின் வனப்பு மலர். இவற்றிற்கும் மேலாக இது தனது அரும்புத் தோற்றம் முதல் அலரும் பருவம் வரை ஒரு புதுமை வளர்ச்சிகொண்ட மலர். பிற மலர்களின் மலர்ச்சியை ஒப்பிடும் போது இதன் மலர்ச்சியைத் 'தலைகீழ் மலர்ச்சி' எனலாம். காந்தட் கொடியில் இதன் அரும்பு தோன்றி ஒரு புறம் சாய்ந்து நிற்கும். இவ்வரும்பின் புறவிதழ்கள் பசுமையானவை. அரும்பின் முனை சற்று வளைந்திருக்கும். இம்முனை செந்நிறங் கொண்டது. கொடிக்காம்புடன் தலைசாய்த்திருக்கும் தோற்றம் பாம்பு தலை நீட்டிக்கொண்டிருப்பது போன்றது. அடுத்த வளர்ச்சியாக இதன் காம்பைக் குறிக்க வேண்டும். இக்காம்பு பக்கவாட்டில் 5, 6 அங்குலம் நீண்டு வளரும். இந் நீட்சியால் இது துடுப்பு எனப்படும். - இத்துடுப்பின் முனை கீழ்நோக்கி வளைந்து தான் தாங்கி யுள்ள அரும்பைத் தலைகீழாக்கும். இத்தோற்றம் வளைந்த பிடியுடைய குடை ஒன்றைக் கையில் தொங்கவிட்டிருப்பது போன்றதாகும். அரும்பு முகையாகிப் போதாகும். தொங்கிய அளவில் இதழ் கள் விரியும். இதழ்கள் ஆறு புடைத்து விரிவடையும். ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு விரல் போன்றிருக்கும். இதழின் வண்ண எழிலை இப்போது காணலாம். அடியில் இளம் பசுமை நிறம், நடுப்பகுதி மஞ்சள் அல்லது வெள்ளை மேற்பகுதி இளஞ் சிவப்பு. முனை சிவப்பு எனத் தோற்றமளிக்கும். இப்பருவ வடிவ அமைப்பு, பாம்பு படம் விரிக்கத் துவங்கும் நிலைபோன்றது.