பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கொஞ்சங் கொஞ்சமாக இலை தழைகளை ஒடித்து, மரத்தையும் வளரச் செய்து, தனக்கும் பயன்படுமாறு செய்கிற புத்தியுள்ள இடையர்களாக, நாம் வாழ வேண்டியது அவசியம்.

இருக்கிறதே என்று கண்டதை ஒடித்து வீணாக்கிப் பார்க்கும் வெறியர்களாக, நாம் வாழ்ந்துவிடக் கூடாது.

இளமைக் காலத்தில், தேகத்தின் சக்தி நீர் நிரம்பிய அணை போல் இருக்கும். இந்தக் காலத்தில் தேகத்தின் சக்தியை அணைத்துப் போடாமல், அணையை உடைத்து அத்தனை நீரையும் வீணாக்கிவிடாமல் பாதுகாத்துக் கொள்பவரே, இளமை கழிந்த காலத்திலும் எடுப்பாக, மிடுக்காக, நலமாக, வளமாக வாழ்வார்கள்.

ஆகவே, எதிலும் நிதானமாக தேகத்தைப் பயன்படுத்தி; நல்ல இலட்சியத்திற்காக உடலைப் பயன்படுத்தி, உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களையே, உலகம் வாழ்த்துகிறது. வணங்குகிறது.

இடையன் எறிந்த மரம் போல, தேகத்தை ஆக்கி விடாமல், தோட்டக்காரன் வளர்ப்பது போல தேகத்தைக் காத்து, சக்தியை வளர்த்து, தேனான வாழ்வு வாழுங்கள். இந்தச் சிந்தனையை நிதமும் நினைவில் கொள்ளுங்கள். என்றும் இனிமையாகவே வாழ்வீர்கள்.