பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும்மாட்டார்.

உடம்பு அழிகிறபோது உயிர் அழிந்து, ஒழிந்துபோகிறது. உடம்பு செழித்துக் கொழித்துக் கிடக்கிறபோது உயிரும் செழித்து செங்கோல் புரிகிறது.

உடல் நலிவடைந்து, கொஞ்சங் கொஞ்சமாக வதங்கும்போது, உயிரும் வதைபடுகிறது. நலிகிறது. நான்கு விதப் பண்புகளையும் இழந்து, இறந்து தடுமாறுகிறது. இதை உணரும் நோயாளிகளும், என் பிராணன் போகிறதே என்று, புலம்பிக் கலங்கி விழுந்து அழுவதையும் நீங்கள் கேட்டிருப்பீர்களே!

படைப்பும் உயிர்ப்பும்

மனிதரையும் மற்ற உயிரினங்களையும் இறைவன் படைத்தான் என்பர் வேதாந்திகள். இறைப்பற்று மிகுந்த மேதாவிகள்.

மனித உடல் பரிணாம வளர்ச்சியால் பக்குவம் பெற்றுக் கொண்டது என்று விளக்குவர் விஞ்ஞானிகள். இயற்கைப் பற்று மிகுந்த ஆய்வாளர்கள்.

எப்படியோ உடல், படைப்பால் வந்தது. அல்லது உயிர்ப்பால் வந்தது என்று நாம், நமது அறிவிற்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.

ஏனென்றால், மனித உடல் மெருகேறியது. மேம்பட்டது. மென்மை மிகுந்தது. வன்மை நிறைந்தது. நுண்மையும் நுணுக்கமும் கொண்டது. நூதனமானது. அதன் அமைப்பின் ஆற்றல் விளக்க முடியாத ஆழ்ந்த புதையல் போன்றது.

அப்படிப்பட்ட செழுமைமிக்க தேகத்தை, முழுமையாகக் கொள்கிறபோது தான், அதன் மகிமை விளங்குகிறது. மகாத்மியம் புரிகின்றது.