15
சேக்கிழார் கண்ட செம்பொருள்
என்று பிறந்தது என்று இயம்ப முடியாத இயல்பினதாய். முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் தமிழ்மொழி விளங்குகின்ற காரணத்தால் தமிழ்மொழி ‘கன்னித் தமிழ்’ என வழங்கப்பெறுகின்றது. “பாலேய் தமிழர் இசை காரர்"1 என்பது ஆழ்வார் வாக்கு. பால் போலும் இனிமை நிறைந்த மொழி தமிழ்மொழி என்பது அப்பெரியார் கருத்தாகும். தெய்வப் புலவைச் சேக்கிழார் பெருமான் ‘ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்’2 என்பர். இதனால் தமிழ்மொழி தொன்மை துலங்கும் மொழி என்பதும், இசை இலங்கும் மொழி என்பதும், தெய்வத் தன்மை தோய்ந்த திருமொழி என்பதும் புலனாகும். ‘தமிழெனும் இனிய தீஞ்சொற் றையல்’ என்று தமிழ்மொழியின் இனிமையைப் பாராட்டுவர் கம்பநாடர். ‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’4 என்று நிகண்டு கூறும். பாரதியாரும் ‘வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண் மொழி’5 என்று தமிழைப் போற்றிப் பாடி மகிழ்ந்தார்.
1.திருவாய்மொழி : 1, 5, 11. 2.மூர்த்தி நாயனார் புராணம்: 3. 3.கம்பராமாயணம்; பம்பை வாவிப் படலம்: 29 4.பிங்கல நிகண்டு. 5.பாரதியார் பாடல்கள்: தமிழ்மொழி.