பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பண்டைய உரைநடை -
இடைக்கால உரையாசிரியர்கள்

‘திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றாேடும் பிறந்த தமிழ்’[1] தொன்மைச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்டது; ஏறத்தாழ முப்பது நூற்றாண்டுகளாக முறையான இலக்கண வரம்புடனும், உயர்வான இலக்கியச் செல்வங்களுடனும் அமைந்து வருவது; இத்தகு தூய நாகரிகமும் தொன்மைச் சிறப்பும் கொண்டு மிளிரும் தமிழ்மொழியில் இதுகாறும் எழுந்துள்ள இலக்கியங்களோ எண்ணற்றவையாகும். இன்று கிடைக்கும் நூல்களில் காலத்தால் முந்திய நூல் தொல்காப்பியமே ஆகும்.

இக்காலம் போன்று விஞ்ஞான வசதிகள் அமைஃ திராத பண்டைய நாளில் - ஏடும் எழுத்தாணியுமே விளங்கிய அந்நாட்களில் உரைநடையினும் செய்யுளே பெரிதும் போற்றப்படுவதாயிற்று. உரைநடையினும் செய்யுளே மனப்பாடம் செய்வதற்கு எளிதாகவும் அமைகின்ற காரணத்தால் அன்று உரையினும் செய்யுளே பெரிதும் வழக்கில் பயிலப் படுவதாயிற்று. நூல்கள் தோன்றிய காலத்தில் அவை எல்லோர்க்கும் எளிதில் விளங்கக் கூடிய நிலையில் இருந்திருக்கலாம்.


  1. 1. பாரதிதாசன் கவிதைகள்: முதல் தொகுதி : சங்கநாதம்