பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பொருள் இயைபிற்கும் ஒழுக்கிற்கும் தெளிவிற்கும் இடமாக வந்தன என்று கொள்ள வேண்டுகின்றேன். இக்கட்டுரைகள் அனைத்தும் ஆராய்ச்சிப் போக்கில் அமைந்துள்ளன. தமிழக வரலாறு, பண்பாட்டுத் தொடர்பான கட்டுரைகள் முதற்கண் இடம் பெற்றுள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் யான் படித்த கட்டுரை பெருமங்கலம் இடம் பெற்றுள்ளது. பதிற்றுப் பத்தினை நான் ‘டாக்டர்’ பட்டத்திற்கென ஆராய்ந்த காலத்தில் சேரர்தம் கொடை வளம்’ எனும் கட்டுரை பிறந்தது. சேரர்களின் தொண்டித் துறைமுகம் பற்றிய கட்டுரை அடுத்து இடம் பெற்றுள்ளது. ‘காதல் உணர்த்திய பண்பாடு’, ‘பழந்தமிழ் இலக்கியத்தில் குழந்தை ஆகிய இரு கட்டுரைகளும் சங்க இலக்கியக் காட்சிகளினின்றும் முகிழ்த்தவைகளாகும். பொருள்வயிற் பிரிவு’, ‘வற்றிய பாலையில் வற்றாத அன்பு’, ‘மடலேறுதல் ஆகிய மூன்று கட்டுரைகளும் காதற் பெற்றியினைக் கவினுற விளக்கி நிற்பனவாகும்.

‘குறள் வழி நடப்போம்’ என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய துணைவேந்தர் உயர்திரு நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் தலைமையில் ஒரு கருத்தரங்கினைச் சென்னை வானொலி நிலையத்தார் ஏற்பாடு செய்திருந்தனர். அதுபோது “குறள்வழி நடப்போம்; கற்றபின் நிற்றலில்’ என்ற தலைப்பில் யான் பேசிய பேச்சு அடுத்து இடம் பெற்றுள்ளது. ‘திருவள்ளுவர் தெளிவுறுத்தும் வாழ்க்கை’, ‘சிலப்பதி: காரத்தில் வரும் போர்க்களங்கள்’, ‘சேக்கிழார் கண்ட செம்பொருள் முதலிய கட்டுரைகள் தனித்தனி மலர்களுக்கு எழுதப் பெற்றனவாகும்.

கம்பநாடர் காவிய நாயகனாம் இராமனை உத்தம சகோதரனாகவும், நல்ல கணவனாகவும் நலமுறத் தீட்டிக் காட்டியுள்ளார். அந்த ஒவியங்கள் அடுத்து இடம் பெற்றுள்ளன. ‘இடைக்கால உரையாசிரியர்கள்’, “சீறாப்புராணத்தில் இலக்கிய நயம் ஆகிய இரண்டும் காற்றிலே மிதந்தவை; அதாவது வானொலிச் சொற்பொழிவுகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அணிகள்.pdf/6&oldid=1314819" இலிருந்து மீள்விக்கப்பட்டது