பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

மேலும் இப்புலவரே பிறிதொரு பாடலில் நாடுவறங்கூர்ந்து பைதல் அற்று வற்கடம் எய்திய வறுமை மிகுந்த சாலையிலும், வற்றாத வண்மையுடையோனாய் ஓம்பா ஈகையினை உளமார மேற்கொள்ளுபவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று போற்றுகின்றார், “இலை உதிர்ந்து வாடிப்போன உன்னமரத்தின் பொலிவற்ற சிறு சிறு கிளைகளிலே சிள்வீடென்னும் வண்டுகள் ஒலிக்கின்றன. நிலம் பசுமையற்று வளம் மாறிப்போன காலம். அந்நிலையில் இசைக் கருவிகளைச் சுருக்கிக் கட்டிய பையோடு ஊர்ப் பொதுவிடங்களை அடைந்து, கூத்தரும் பாணருமாகிய பரிசிலர்கள் மறுகுகளின் இறைக் கண்ணே நின்று பாடுவர். அவர்தம் கடும்பசி நீங்கக் களிப்புடன் உதவுவான் சேரன். பொன்னாலாகிய அணிகலன்கள் பலவற்றை அவர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்விப்பான். அவற்றை மகிழ்வோடு புனைந்தகூட்டம் ‘நெஞ்சுமலி உவகையோடு’ ஆடிப்பாடும். அவ்வமயம் சேரவேந்தன் சிறிதே நறவுண்டு சிறு மகிழ்ச்சியோடு இருப்பினும் பெரும் விலைபோகும் அணிகலன்கள் பலவற்றை வயிரிய மாக்களுக்கு வாரி வழங்கி மகிழ்வான்."

அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
நிலம்பை தற்ற புலங்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண்
மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழை பொலியப் பெரிதுவந்து
கெஞ்சுமலி வுவகையர் உண்டுமகிழ்ந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ.

18


18. பதிற்றுப் பத்து:III:3:1.10