பக்கம்:இலக்கிய மரபு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாகுபாடு

11


மக்கள் நுதலிய அகனைந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெருஅர்.*

நெடுநல்வாடை என்ற பழம் பாட்டினுள், உயர்ந்த காதலரின் வாழ்வு பாடப்பட்டுள்ளது. ஆயினும் அது அகப்பொருளாகக் கருதப்படுதல் இல்லை. காரணம்: அதனுள் தலைவனுடைய வேல் பாண்டியர்க்கு உரிய வேப்பமாலை சூடி விளங்குவதாகப் பாடப்பட்டிருத்தலே ஆகும். "இப்பாட்டு, சுட்டி ஒருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகப்பொருளாமேனும்,வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகம்' என அடையாளப்பூக் கூறினமையின், அகமாகாதாயிற்று" என நச்சினார்க்கினியர் எழுதியுள்ளார்.

ஐந்திணை

இந்த அகப் பொருள், காதலரின் மன நிலையையும் வாழ்வையும் ஒட்டி ஐவகையாகப் பகுக்கப்பட்டு, அகனைந் திணை எனப்பட்டது. கூடல், பிரிதல்,இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் நிலைகள் பற்றி முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என ஐவகையாக அமைந்தன. குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு எனப் பத்துப்பாட்டில் உள்ளவை இவ்வாறு அமைந்தனவே ; பாலைக்கலி, நெய்தற் கலி எனக் கலித்தொகையில் அமைந்தனவும் காண்க.

நிலத்தை நான்கு வகையாகப் பகுத்து, நானிலம் என்று வழங்கும் மரபு உண்டு. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த இடமும் முல்லை; வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இந்நால்வகை நிலங்களுள், மழை யில்லாமையால் வறட்சியுற்றுக் கெடுவன குறிஞ்சியும்


தொல். பொருள். அகத்திணையியல், 54. நெடுநல்வாடை, 176.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/15&oldid=1688877" இலிருந்து மீள்விக்கப்பட்டது