பக்கம்:இலக்கிய மரபு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இலக்கிய மரபு


முல்லையும் ஆகும். அவ்வாறு கெட்ட நிலையில் அவை பாலை எனப்படும்.இந்நிலங்களில் வாழ்வோரின் வாழ்வு பற்றி அமையும் பாட்டுக்கள், இந்நிலங்களின் பெயராலும் வழங்கும். காட்டில் வாழும் ஆயர்களின் காதல் வாழ்க்கை பற்றிய பாட்டுக்கள் முல்லைக்கலி எனக் கலித்தொகையில் வழங்குதல் காணலாம்.

கோவை

கோவை என்று ஒரு நூல் வகை உண்டு. திருக் கோவையார், தஞ்சைவாணன் கோவை என்பன இன்றும் போற்றிக் கற்கப்படுகின்றன. ஐந்திணைக்கும் உரிய அகப் பொருள் (காதல்) துறைகள் பற்றி நானூறு கட்டளைக் கலித்துறையால் பாடுவதாகும் இது. நூலைப் பாட்டுடைத் தலைவன் ஒருவன்மேல் பாடுவர். அதனுள் அமைந்த அகப்பொருள் துறைகளுக்கு உரிய தலைவன் கற்பனைத்தலைவன் ஆவான். கோவையில் உள்ள ஒவ்வொரு செய்யுளிலும் இந்த இருவகைத் தலைவரும் பாடப்பெறுவர்.

பாகையும் தேனையும் போல்மொழி யார்தமிழ்ப் பைந்தொடையும்
வாகையும் சூடிய வாணன்தென் மாறை வளமுமவன்
ஈகையும் போலும் எழிலியை நோக்கி இரங்குபுள்ளும்
தோகையும் போல்நின்ற வாதனி யேயிந்தச் சோலையிலே.*

தலைவன் தலைவியைக் காணுதல் என்னும் அகப்பொருள் துறை பற்றியது இது. எழிலி, அகப்பொருள் தலைவி. கூறுபவன் தலைவன்.வாணன் எனப்படுவோன் பாட்டுடைத் தலைவன். இவ்வாறு நானூறு பாட்டுக்கள் கோவையாக அமைவது இந்நூலாகும்.

அகப்பொருள் துறைகள் பலவற்றையும் பாடாமல் அவற்றுள் ஏதேனும் ஒரு துறை பற்றியே கோவை


  • தஞ்சைவாணன் கோவை, 58.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/16&oldid=1688951" இலிருந்து மீள்விக்கப்பட்டது