________________
172 இலக்கிய மரபு கதை எழுதுவோரின் தொகையே மிகுந்துவருகிறது. உணர்ச்சியுடன் வாழத் தெரிந்து, தாம் உணர்ந்ததைக் கடிதம் போல் எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் தம் வாழ் நாளில் ஒரு சிறுகதையேனும் எழுதிவைத்து மறைய முடியும் என்று ஆங்கில அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். ஆதலின், தமிழ் நாட்டில் சிறுகதை யாசிரியர்களின் தொகை இனியும் பெருக இடம் உண்டு எனலாம். ஆனால் சிறுகதையின் இலக்கியத் திறன் குறையாமல் காத்தல் வேண்டும். வார இதழ்களும் மற்ற வெளியீடுகளும் பெருகுவதால், அவற்றிற்குத்தேவையானபடி சிறுகதைகள் எழுதிக் குவிப்பதில் பயன் இல்லை. கலை, உள்ளத்து உணர்வு தூண்டப் படைக்கப்படுவது. அத்தகைய தூண்டுதல் இன்றி, எழுதியனுப்ப வேண்டிய நெருக்கடியால் பிறக்கும் சிறுகதைகள் பல கலைச்சிறப்புக் குன்றிப் போகின்றன. சில கதைகள் ஊர் பெயர் முதலியன மாறிப் புதியன போல் தோன்றினும், பழைய கதைகளின் போலி வடிவங்களாக ஆ ஆகின்றன. சிறுகதைகளை வளர்த்த இதழ்களே, இவ் வாறு அவற்றின் சிறப்புக்கு இடையூறாகவும் உள்ளன. இந்த மாசு படியாமல் உண்மைப் படைப்பாக வரும் சிறு கதைகளே இலக்கியமாக வாழ வல்லன. ..