பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111 உளமாரப் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி ஆசிரியர் முதலில் சிறந்த புறப்பொருளாகிய பட்டினத்தின் பாங்கினைப் பாடியதோடு, நூற்பெயரின் முதற் பகுதியைப் பட்டினம்’’ என்றும் அமைத்துள்ளார். இப்பாடலில் பேசப்படும் அகவொழுக்கம் அன்பினைந் தினையுள் ஒன்றாகிய ஒழுக்கமாகும். பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ஆகும். தனது மனத்திற்கு இனியாளை மணந்து இல்லிருந்து, இனிய இல்லறத்தை மேற்கொண்ட தலைவன் பொருளீட்டுவதற்காக வேற்று நாட்டிற்குச் செல்லக் கருதி, அதனைக் குறிப்பால் தலைவிக்கு உணர்த்த, அவள் கலங்கி, கண்ணீர் உகுத்து, அலைகடல் துரும்பென அவதியுற்றாள். அதனேக் கண்ட தலைமகன் தனது நெஞ்சை நோக்கி, 'கண்டோர் காமுறும் காவிரிப்பூம் பட்டினத்தைப் பெறுவேனெனினும், தண்ணளி செய்யும் தலைவியைப் பிரிந்து, செந்நெருப்பினைத் தகடு செய்து பார் செய்ததொக்கும்' பாலை நிலத்தைக் கடந்து வாரேன்” என்று கூறித் தான் பிரிந்து செல்லுதலைத் தவிர்த்தான். இவ்வாறு செலவினை மேற்கொள்ளாதது, இப்போது ஆற்றாளான தலைவியைப் பலதிறத்தானும் அறிவுறுத்தி ஆற்றிப் பின் பிரிதற்கே ஆகும். எனவே தலைவன் இப்போது பிரிந்து செல்வதை நீக்கியது பின் பிரிந்து செல்வதற்குக் காரணம் ஆதலின், இந்நூல் பிரிதல் நிமித்தத்தின் கண் வந்து பாலை ஒழுக்கத்தைக் கூறுவதாயிற்று. எனவே இந்நூலின் பெயரின் பிற்பகுதி பாலை' என்ற சொல்லைக் கொண்டுள்ளது. இவ்வாறு நூலின் பெயர். பாட்டின் பெயர், பட்டினப்பாலை ஆயிற்று. இப் பெயர் இந்நூலிற்கு மிக மிகப் பொருந்தி உள்ளது.