பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

அஃதாவது குறவஞ்சியினது இயல்பு, எழில் பண்பு நலன்கள், அவள் வாழும் மலையின் மாண்பு. அம்மலையைச் சார்ந்த நாட்டின் நலம், நாட்டில் இருக்கும் நகரின் சிறப்பு, குறவஞ்சி பிறந்த குறக்குடியின் இயல்பு, குறவர்தம் தொழில்கள், குறத்தியின் தலையாய பணியாகிய குறிசொல்லுதல் முதலியன குறவஞ்சி நூலில் பேசப்படும் பொருள்கள் ஆகும்.

பொதுவாக, குறவஞ்சி இலக்கியத்தில் ஒரு தலைவனே அன்றிக் கடவுளரோ, உலா வருவதாகப் பாடுவது மரபாகும், அதுகால், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய எழுவகைப் பருவ மகளிர், உலாவரும் தலைவனைக் கண்டு, கருத்தை இழந்து, நாணைத் துறந்து, அவனிடத்துத் தம் நெஞ்சத்தை இழந்து நிற்பார்கள். அத்துடன் எழிலும், ஏற்றமும், தோற்றப் பொலிவும் மிக்க இளமங்கை ஒருத்தி தலைவனது அழகிலே, ஆண்மை, அன்பு, அருள் ஆகிய பண்பு நலன்களிலே தன் உள்ளத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, செயல் இழந்து, செதுக்கிய கற்சிலை போல் நிற்பாள்.

அனைவர்க்கும் கிட்டாதவனாய்த் தலைவன் உலாப் போந்து தன் இருக்கையை அடைவான். தன் எண்ணம் நிறைவேறாத கன்னியோ, காதல் நோயால் அலைகடல் துரும்பென அலைக் கழிக்கப்பட்டு, ஆவி சோர்ந்து, அல்லற்பட்டு, அவனையே எண்ணி, எண்ணி, இளைத்து, என்ன செய்வது என்றறியாது ஏங்கித் தவிப்பாள். அந்நிலையில், கோல் கொண்டு குறி சொல்லும் குறத்தி வந்து மயங்கி நிற்கும் மட நல்லாளின், காந்தள் மலரொத்த கையினைப் பார்த்து, நீ காதலித்தவனே நின் கணவனாக வருவான்' என்று கூற, கன்னியும் கழிபேருவகை அடைவாள். பொன்னும் மணியும், ஆடையும் அணிகலனும் குறி சொல்லிய குறத்திக்கு அவள் கொடுத்து மகிழ்வாள். இப்பகுதியே குறவஞ்சி இலக்கியத்