பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

மாவட்டத்தில், தென்றல் இசைபாடும் தென்காசிக்கருகிலி ருக்கும், குன்றா அழகுடைய குற்றால நீர்வீழ்ச்சிக்கு அருகமைந்த, கோடையிலும் மென்காற்று வீசும் மேலகரம் ஊரில் பிறந்த, தேனினுமினிய தென் மொழிப் பாவலர் திரிகூடராசப்பக் கவிராயர் ஆவார். இவர் விருந்தோம்பி வேளாண்மை செய்யும் பெருங்குடிப் பெருமகன் ஆவார். இவர் இற்றைக்கு இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார். மதுரத்தமிழ் வாழும் மதுரை மாமன்னர் முத்து விசயரங்கர் சொக்கநாத நாயக்கர் நம் புலவருக்கு 'திருக்குற்றால நாதர் கோயில் புலவர்' என்ற பட்டத்தை அளித்துப் பாராட்டியதோடு, குறவஞ்சியின் சிறப்புக் கருதி, குறவஞ்சிப் புலவருக்கு, குறவஞ்சி மேடு என்னும் பெயருடைய எஞ்சா வளமுடைய நஞ்சை நிலத்தை முற்றூட்டாக அளித்து அவரது சீரிய புலமைக்குச் சிறப்புச் செய்தார். இவர் மரபில் வந்தவர் குடும்பம் இன்றும் 'கவிராயர் குடும்பம்' என்றே வழங்கப்படுகின்றது. சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதவியல் இணைப் பேராசிரியராக விளங்கும் திரு. சிவசுப்பிரமணியம், தமிழ் ஆசிரியரும், முதுநிலைப் பள்ளித் தணிக்கை அலுவலருமான திரு. திரிகூடராசப்ப பிள்ளை, காவல் துறையில் சென்னை நகர் துணை ஆணையாரகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு வை. பால சுப்பிரமணியம் ஆகியோர் குறவஞ்சி ஆசிரியர் வழியில் வந்தோர் ஆவர். தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும் உயர்ந்த மலையாகிய குற்றாலத் திரிகூடமலையில் குறும் பலா மரத்தினடியில் வீற்றிருக்கும் இறைவனிடத்து இடையறாத பேரன்பு செலுத்திய குறவஞ்சிப் புலவர், இறைவனது புகழைப் போற்றி, "திருக்குற்றாலத் தல புராணம்", "திருக்குற்றால மாலை", "திருக்குற்றாலச் சிலேடை வெண்பா", "திருக்குற்றால யமக அந்தாதி", "திருக்குற்றால உலா", "திருக் குற்றால ஊடல்", "திருக்குற்றாலப் பரம்பொருள் மாலை", "திருக்குற்றாலக் கோவை", "திருக்குற்றாலக் குழல் வாய்