பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25 பெறும் தலைவி, வன்ன மோகினியை ஒத்த வசந்தவல்லி ஆவாள். வசந்த மோகினியாகவும் விளங்கிய அவள் கண்ட ஆடவர் உயிரை வருத்தும் பேரழகுடன் கூடிய மோகினிப் பெண்ணாகத் தெய்வப் பெண்ணாகத் தோற்றம் அளித்தாள். அவள் பொன் அணித்திலகம் தீட்டி, மனமிகு மலர்மாலை சூட்டி, மாறனைக் கண்ணாலே மருட்டி, அத்துடன் கையாரச் சூடகம் (வளையல்) இட்டு, தன் போன்ற மின்னாரை வெல்லும் படியாகக் கண்ணில் ஒரு நாடக மிட்டு, பெண்களே அவளைப் பார்த்து மயங்கும்படியான பேரெழில் மங்கையாகக் காட்சி தந்தாள். அத்துடன் அவள் தெய்வ அரம்பை போல விளங்கியதோடு வீதியிலே ஒய்யாரமாக நடந்து ஓவியம் போலவே வந்தாள்; பேடை அன்னம் தோற்கும்படியாக அவள் நடை பயின்று வந்தாள். இதோ அவ் ஓவியம்: கருமுகில் சுற்றிச் சுருண்டு சுழியெறிவது போன்ற கொண்டை, குழை ஏறியாடி நெஞ்சைச் சூறையாடும் விழிக் கெண்டை; அழகுள்ள முள் முருக்கின் அரும்பையொத்த சிலையைப் போல் (வில்லைப் போல்) வளைந்து மூன்றாம் பிறையைப் போல் இலங்கும் நுதல்; அரம்பை நாட்டு வான வில்லும் விரும்பி கன்னல் மொழி பேசும்படி அமைந்த கண்களின் புருவம்; பிறர் அறிவை மயக்கும் மங்கைப் பருவம்; கடல் கொழித்த முத்து நிரை பதித்த பல்; அப்பல்லின் அழகை எட்டி எட்டிப் பார்க்கும் எழில் மிகு முத்தை உடைய மூக்கு; முழுநிலவு பழகும் வடிவு தங்கி அழகு குடிகொள்ளும் முகம், கமுகை வென்ற கழுத்து; கல்லுப்பதித்த பொற்கடகம் பட்ட செங்கை, கச்சணிந்த மார்பு, அடுக்கு வண்ணச்சேலை உடை அன்ன நடை. சுருங்கக் கூறின், இறைவனது அன்பில் வத்திருக்கும் முனிவரது மனமாகிய கல்லையும் கரைந்துரு கும்படிச் செய்கின்ற உருவத்தைக் கொண்டு விளங்கினாள் அத்துடன் அவள் அழகெலாம் ஓருருக் கொண்டு வந்தது போல் அருள் வழங்கும் தெய்வத் தலைவருக்கு ஏற்ற அழகுத் தெய்வமாக விளங்கினாள்.