பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 பூங்குழல் சரிய, தோழியர் தன்னைச் சுற்றி நிற்க, முன்னும் பின்னும் எங்கும் சுழன்று, மூன்றடி நாலடி நடந்து,விரைந்து, தோழியர் கூட்டத்தில் திரும்பி, இடசாரி, வலசாரி சுற்றி, மந்தர மலை போன்ற மார்பகம் ஏசலாடவும், மகரக் குழைகள் ஊசலாடவும், சுந்தர விழிகள் பூசலிடவும், தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என்னும் ஒலி எழும்படி வசந்த வல்லி பந்தடிக்கும் காட்சியினைப் பார்க்க அயன் ஆயிரங்கண் படைத்திலானே’ என்று இரங்கிக் கூறியுள்ளார். குறவஞ்சி நூலில், உலாவருகின்ற தலைவனைக் கண்ட தலைவி, தன் உள்ளத்தைத் தலைவனது அழகிலே பறி கொடுத்து, காதல் நோயால் கலங்கித் தவித்து அலைகடல் துரும்பென அல்லற்படுவதாகப் பாடுதல் மரபாகும். ஆனால் அவ்வுலாக் காட்சி மேடையில் காட்டப் படுவதில்லை என்பது இங்கு நினைவு கூரத்தக்கதாகும், உலாக் காட்சியைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்த தலைவி, சங்க வீதி தன்னில், குதிகால்களாகிய இரண்டு பந்துகளும் குதி கொண்டாட குதித்துக் குதித்து அசைந்தாடி, தன் ஒரு கையில் ஒரு பந்தைக் கொண்டு ஆடி விளையாடிய வசந்த வல்லி, மாயை என்னும் ஒரு சிமிழின் உள்ளே ஒன்றிற் கொன்று தொடர்புடையனவாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐந்து பந்துகளையும் மறைத்தும் வெளிப்படுத்தியும் வித்தை ஆடும் சித்தராகிய குற்றால நாதரை எதிர் கொண்டாள். இதனை ஆசிரியர், "வருசங்க விதி தன்னில் வசந்த பூங்கோதை காலில் இருபந்து குதிகொண்டாட இருபந்து ... கொண்டாட ஒருபந்து கைகொண் டாட ஒருசெப்பில் ஐந்து பந்தும் தெரிகொண்டு வித்தை ஆடுஞ் சித்தரை யெதிர் கண்டாளே” என்று சுவைபடக் கூறியுள்ளார்.