பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47 யின் செழிப்பையும், அதன் இலக்கிய வளத்தையும் நமக்குக் காட்டுவன தமிழ்க் காப்பியங்களாகும். ஒரு கவிஞனின் உண்மையான புலமையைக் காண்பதற்குப் பெரிதும் உதவுவது காப்பியமே. காப்பியந்தான் கவிஞனது களமாகும். கவிஞனுடைய விரிந்த கற்பனைக்கும், காவிரிபோல், கங்கைபோல் ஊறுகின்ற கருத்து வெள்ளத்துக்கும் இடமாக அமையவல்லது காப்பியமே. காப்பியத்தைத் தனி உலகம் என்று கூடச் சொல்லலாம். அந்த அருமையான உலகிலே மஞ்சு கண் துஞ்சும் மாமலைகள், அவற்றிலிருந்து இழுமெனும் ஓசையுடன் ஒழுகுறும் அருவிகள், கரை புரண்டோடி வரும் மணி ஆறுகள், அவற்றின் கரைகளிலே கன்னலும், செந்நெலும், கனி குலுங்குந் தோப்புக்களும் சூழ்ந்த ஊர்கள், நிரை நிரையாகத் திரையெழுப்பி இரையும் கடல், கடலுக்கு மேலே வானம், அங்கே கண்சிமிட்டும் விண் மீன்கள், தண்ணொளி பொழியும் வெண்ணிலவு செங்கதிர் முதலிய அத்தனை காட்சிகளையும் காணலாம்; கவலையை மறக்கலாம்; களிப்பு வெள்ளத்திலே நீந்தலாம்.

     காப்பிய இலக்கணம்
  காப்பிய இலக்கணத்தைக் கூறுகின்ற நூல்கள் தமிழில் அதிகம் இல்லை. இருப்பனவற்றுள் கற்று வல்ல புலவர் மக்களால் பெரிதும் குறிக்கப்படுவன இரண்டு. அவை தண்டியலங்காரமும், மாறனலங்காரமுமாம். இவ்விரண்டு நூல்களும் காப்பிய இலக்கணத்தை மட்டும் உணர்த்துவன அன்று; அவற்றுள்ளே கூறப்படும் செய்திகளுள் காப்பிய இலக்கணமும் ஒன்றாகும்.

இவ்விரு நூல்களும் மிகவும் பிற்காலத்தில் தோன்றியவையாகும். இவற்றிற்கு முன்பே அருமையும், மொழிச் செழுமையும், பொருள் வளமும் உடைய காப்பியங்கள் பல தோன்றின. எனவே இவ்விரு நூல்களும் கூறுகின்ற காப்பிய இலக்கணம் முழுவதும் இவற்றிற்கு முந்தித் தோன்றிய செந்தமிழ்க் காப்பியங்களில் அமைந்திருக்க