பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

  • மாசறு பொன்னே வலம் புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே, அரும்பெறற் பாவா பாருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே யென்கோ அலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ யாழிடைப் பிறவா விசையே யென்கோ'

ஆகிய வரிகளிலே உணரலாம். ஒவ்வொரு சொல்லும் கோவலனது உணர்ச்சி வெள்ளத்திலே மிதப்பதாகும். இது மட்டுமன்று. அங்கங்கே காணப்படும் மலைவருணனை, காலை மாலை வருணனைகள், சோலை வருணனை, ஆற்று வருணனை முதலியவை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிப்பனவாகும். இனி அவற்றைக் காண்போம். சேய்மையில் தோன்றும் சேரநாட்டு மலைகளின் நிறம் நீலமாய் நெடிய திருமாலைப் போல் விளங்க, ஒன்றன் மேல் ஒன்றாய், படிப்படியாய் உயர்ந்து நிற்கின்ற முகட்டிலே தோன்றி குறுக்காக ஓடிவரும் பேரியாறு மாலின் மார்பில் குறுக்கே கிடந்து அணி செய்யும் முத்து மாலையைப்போல் காட்சிதர, அவ்வாற்றின் இரு கரைகளிலும் கோங்கம், வேங்கை, கொன்றை, நாகம், திலகம் முதலிய மரங்கள்நிரம்பப் பூத்து உதிர்த்த பூக்கள் ஆற்றின் நீர்வெளியைத் தெரியாதபடி மூடிவிடுகின்றன, இக்கண்ணக்கு இனிய காட்சியினை நம் கவிஞர், கோங்கம் வேங்கை துரங்கினர்க் கொன்றை நாகந்திலக நறுங்கா ழாரம் உதிர்பூம் பரப்பி னொழுகு புன லொளித்து மதுகர வண்டினம் பாட நெடியோன் மார்பிலாரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாறு' என்று கற்போர் பாராட்டும் வண்ணம் பாடியுள்ளார்.