பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 60


எனத் தொடங்கி,

   "ஒருதனி யஞ்சுவென் றிருவே வா"
   என முடியும் பகுதியைச் சொல்லலாம், இந்நூலின்கண் சொல்லழகும், பொருளழகும் நிறைந்து நிற்பது கண்கூடு. மணிமேகலையின் அழகை உரைக்க வந்த ஆசிரியர்,
   "படையிட்டு நடுங்குங் காமன் 
                     பாவையை 
   ஆடவர் கண்டா லகறலு முண்டோ 
   பேடிய ரன்றோ பெற்றியி 
                      னின்றிடின்"

என்கிறார்,

   சிறையு முண்டோ செழும் புனன் 
                         மிக்குழிஇ 
   நிறையு முண்டோ காமம் 
                     காழ்க்கொளிற்"

என்பது பொருட் செறிவுக்கு ஒரு சிறு சான்றாகும்.

   "ஒப்பற்ற தத்துவப் பேரறிஞனாக இல்லாத ஒருவன் சிறந்த கவிஞனாக இருந்ததில்லை" என்பது கோலரிட்சின் மொழியாகும். அதற்கு இலக்கியமாக நாம் காட்டக் கூடிய புலவர் சாத்தனாரே என்னலாம். சாத்தனாரின் மெய்யுணர்வுப் புலமையை 27, 29, 30, ஆகிய மூன்று காதைகள் தெள்ளிதின் காட்ட வல்லனவாம். அவற்றின் மூலம் சாத்தனரது பிற சமயப் புலமையும், புத்த சமயத்தில் அவர் கொண்ட வித்தகத் தன்மையும் நன்கு புலனாகும்.

சில எடுத்துக்காட்டுக்கள் வருமாறு :

   "அழல்வாய்ச் சுடலை தின்னக் 
                        கண்டும் 
   கழிபெருஞ் செல்வக் கள்ளாட் 
                         டயர்ந்து 
   மிக்க நல்லறம் விரும்பாது வாழும் 
   மக்களிற் சிறந்த மடவோ 
                        ருண்டோ.”