பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

நாடு நகரங்களில் இரா எனினும், அவை அவர் பாடிய இலக்கியங்களைப் படிப்பார்க்குப் பேரின்பம் பயந்து, ஒருவாற்றான் பொருந்தியிருந்தன.

இவ்வாறு சிலர் புராணம் பாடி மகிழ, சிலர் தமிழ் நாட்டுக் கோயில்களில் குடிகொண்டிருக்கும் கடவுள்களின் பெருமைகளைப் பாராட்டிப் பல்வேறு இசை அமையப் பாக்கள் பல பாடிப் பரவும் பணியினை மேற்கொண்டனர். அதன் விளைவாய், அந்தாதி, உலா, கலம்பகம், குறம், கோவை, பிள்ளைத் தமிழ், மாலை போலும் வழிபாட்டு இலக்கியங்கள் பல வரம்பின்றித் தோன்றின.

இக்காலத்தே எழுந்த இலக்கியங்களில் பிறிதொரு சிறப்பும் புலனாம். பௌத்தம் சமணம் முதலாம் வடநாட்டுச் சமயங்கள், தமிழ் நாட்டில் தலையெடுக்கத் தொடங்கிய காலத்தில், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்க ஒன்று கூடித் தொண்டாற்றிய தமிழ்நாட்டுச் சமயங்களாய சைவமும், வைஷ்ணவமும், அவ்வடநாட்டுச் சமயங்கள் வாழ்விழந்து போன பின்னர், தம்முள்ளே போட்டியிட்டு வளரத் தொடங்கின. அதற்கேற்ப, அவற்றின் சிறப்புரைக்கும் இலக்கியங்களும் போட்டியிட்டு வளர்ந்தன. இராமன் வரலாறுரைக்கும் இலக்கியத்திற்கு எதிராக, முருகன் வரலாறுரைக்கும் கந்தபுராணமும், திருமால் பெருமை கூறும் பாகவத புராணத்திற்கு எதிராகச் சிவபெருமான் பெருமை கூறும் திருவிளையாடற் புராணமும் தோன்றின. இவ்வாறே, திருமால் பெருமை கூறும் வழிபாட்டு இலக்கியங்களும், சிவபெருமான் பெருமை கூறும் வழிபாட்டு இலக்கியங்களும் வரம்பின்றித் தோன்றின.