பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

பெருமைகளை விளக்கும் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாயின; அவ்வாறு வெளியாகும் அவையும், வடமொழி விரவாத, தூயதமிழ் நடை வாய்ந்தனவாதல் வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வம் காட்டினர்; அம்மட்டோ! தம் பெற்றோர் தமக்கு இட்டு வழங்கிய வேதாசலம், பாலசுந்தரம் போலும் வடமொழிப் பெயர்களை மறைமலை, இளவழகன் போலும் இனிய தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொள்வதையும் தம் மக்கட்குத் திருமாவளவன், அறிவுடைநம்பி, முல்லை, தாமரை போலும் தனித் தமிழ்ப் பெயர்கள் வைத்து அழைப்பதையும் விரும்பி மேற்கொண்டனர். அன்று தொடங்கிய இவ்விலக்கிய விழிப்புணர்ச்சி இடையே மங்கிவிடாது. இன்றுவரை, எவரும் கண்டு பாராட்டும் வகையில் வளர்ந்து கொண்டே உளது; சிறந்த உரைநடை இலக்கியங்கள் நாள்தோறும் உருவாகிக் கொண்டே உள்ளன.

ஆங்கில மக்களின் கூட்டுறவாலும், உலக மக்களனைவரையும் ஒருங்கே காணவல்ல வாய்ப்புப் பெற்றமையாலும் தாமும், தம் நாடும், தம் மொழியும் பண்டு பெற்றிருந்த பெருநிலையினையும், இன்று பெற்றிருக்கும் இழிநிலையினையும் கண்ட தமிழ் மக்கள், உரிமை வேட்கையும், இன உணர்ச்சியும், மொழிப்பற்றும் கொண்டு விழிப்புற்றனர். தாம் பல்லாற்றானும் தாழ்வுற்றமைக்கு, ஆளும் உரிமையற்று அடிமைகளாகி விட்டமையே தலையாய காரணமாம் என உணர்ந்தனர்; அதனால் ஆளும் ஆங்கிலேயரை அகற்றி விட்டுத் தாமே ஆள எண்ணினர்; அவ்வெண்ணம்,