பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

யாலும் ஒரு குறையும் உருது வாழ நல்லாட்சி நிலவும் நாடாய்ப் பகை ஒழித்துப் பண்பு வளர்த்து விளங்க, நாட்டு மக்கள், ஊக்கமும் உரமும் உள்ள உயர்வும் உயர்ந்த ஒழுக்கமும் உடையவராய் நிறை வாழ்வு வாழும் காலத்தில், அந்நாட்டில், அன்னார் வாழும் காலத்தில் தோன்றிய அறிஞர்கள் நாட்டின் நன்னிலை கண்டு, நாட்டு மக்களின் நற்பண்பு கண்டு, அகம் மிக மகிழ்வதும் அந்நாடே நாடு, அந்நாட்டு மக்களே மக்கள் எனப் பாராட்டுவதும், எந்நாடும் அங்காடு போலாயின், எந்நாட்டு மக்களும் அந்நாட்டு மக்களேபோல் வராயின், உலகில் அமைதி நிலவும்: உலக மக்கள் உயர்நிலை பெறுவர். ஆகவே, பிற நாடுகளும், பிற நாட்டு மக்களும், இந்நாட்டையும், இந்நாட்டு மக்களையும் அறிந்து அவர் வழி செல்லுமாறு, இங்குள்ள நிலையினை எடுத்துக் காட்டுவதைக் கடமையாகக் கொள்வதும் செய்வர். தம் காலத்தே, தம் நாட்டைச் சூழ உள்ள நாடுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் காட்டுவதோடு, தமக்குப் பின் வாழும் தம் நாட்டு மக்களுக்கும் காட்டுதல் வேண்டும் எனக் கருதுவர். கருதிய அவ்வான்றோர், தாம் வாழும் தம் நாடு, அந்நாட்டு நல்லாட்சி, அந் நல்லாட்சிக்குரியோனாய் அரசன், அவன் ஆட்சி மாண்பு, அந்நாட்டு மக்கள், அவர் மனவளம், அவர தம் வாழ்க்கை வனப்பு ஆகிய அனைத்தையும் பாட்டில் இசைத்துப் பாராட்டிச் செல்வாராயினர். அவ்வாறு அவர் பாடிய அப் பாக்களே இலக்கியங்களாம். ஆதலின், இலக்கியம், அவ்விலக்கியத்தைப் பெற்ற மக்களோடு ஒன்றி நிற்கும் இயல்புடையதாயிற்று.