பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11
அசோக வனம்

ராமாயணத்தில் அயோத்தியைவிட இலங்கையைப் பற்றித்தான் அதிகமான செய்திகள் இருக்கின்றன. இராமாயண வரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகள் இலங்கையில் நிகழ்கின்றன. பாலகாண்டம், அயோத்தியா காண்டம் என்ற இரண்டு காண்டங்களில் அயோத்தியைக் காண்கிறோம். சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்ற இரண்டு காண்டங்களில் இலங்கையையே இடமாகக் கொண்டு கதை படர்கிறது. சுந்தர காண்டத்தில் அநுமான் இலங்கை முழுவதும் உலாவுகிறான்; ஊர் முழுவதும் அலைந்து சீதையைத் தேடுகிறான். வால்மீகியும் கம்பரும் இலங்காபுரி வருணனையை அவ்விடத்தில் மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். சுந்தர காண்டத்தில் அசோகவனத்தில் 'சோகத்தாளாய நங்கை' சிறையிருந்த நிலையைக் காண்கிறோம். இராமாயணம் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்வது என்று கூறுவார்கள். சீதைக்கு ஏற்றம் தந்தது அவள் சிறையிருந்தது என்றால், அவள் சிறையிருந்த இடமாகிய அசோக வனமும் ஏற்றமுடையதுதானே?

இலங்கைப் பிரயாணத்தில் இராமாயணத்தை நினைவுறுத்தும் இடங்களைக் காணவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. புதிய ஊர்களுக்குப் போனால், "இந்த ஊரின் பெயர் என்ன? இங்கே