பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசோக வனம்

117

லென்ற மலரையுடையது என்று புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நெட்டிலிங்க மரத்தில் பூ இருக்கிறதோ, இல்லையோ, அதை நான் பார்த்ததே இல்லை" என்றேன்.

"அசோக மரத்தையும் அதன் பூவையும் நேரே காட்டுகிறேன்" என்றார் கணேஷ்.

"சீதா பிராட்டியைக் காட்ட முடியுமா?"

"என்னை அநுமான் என்று நினைத்தீர்களா?" என்று அவர் கேட்டபோது நாங்கள் யாவரும் சிரித்து விட்டோம்.

"சீதா பிராட்டியைக் காட்ட முடியாது. ஆனால் சீதை இருந்த இடத்தைக் காட்டுகிறேன்" என்று அவர் சொன்னார்.

நாங்கள் அசோகவன யாத்திரையைத் தொடங்கினோம். அன்று (20.9-51) வியாழக்கிழமை.

கார் மலைப்பகுதிகளில் போய்க்கொண்டே இருந்தது. முன்பே நான் கண்டு மகிழ்ந்த குறிஞ்சி வளம் இந்த இடங்களில் மிக மிக அற்புதமாக இருந்தது. மலைகளில் அழகான ரோடு. வளைந்து வளைந்து கார் சென்றது. தவறி விழுந்தால் கிடுகிடு பாதாளத்துக்குப் போகவேண்டியதுதான். அங்கங்கே சில அருவிகளைப் பார்த்தேன். ஓரிடத்தில் 1500 அடி உயரத்திலிருந்து அருவி விழுந்துகொண்டிருந்தது. அதன் அருகில் வந்தபோது அங்கே சற்று நில்லாமல் போக மனம் வரவில்லை. காரை நிறுத்திக் கீழே இறங்கி அருவியின் கண்கொள்ளாத அழகைப் பார்த்தேன்.