பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசோக வனம்

121

தேன். சில நேரம் அதையே பார்த்துக்கொண்டு நின்றேன்.

ஆம், அந்தக் குளத்தில் பொற்றாமரையைக் கண்டேன். செந்தாமரை, வெண்டாமரை என்ற இரண்டு வகைகளையும் கவியிலும் உலகிலும் கண்டு களித்தவர் பலர். ஆனால் மதுரைக்குப் போனவர்களுக்கும் திருவிளையாடற் புராணம் படித்தவர்களுக்கும் பொற்றாமரை என்ற பெயர் தெரியும். மதுரைக் கோயிலில் உள்ள தீர்த்தத்துக்குப் பொற்றாமரைக்குளம் என்று பெயர். ஒரு காலத்தில் அதில் பொன் நிறம் பெற்ற தாமரை பூத்ததாம். நான் பொன் நிறத் தாமரையையே ஹக்கலாப் பூந்தோட்டத்தில் பார்த்தேன். அழகான மஞ்சள் நிறம் கதிரவன் ஒளியிலே பளபளக்கும்போது பொன்னாகவே தோன்றும் அல்லவா? அதை மஞ்சள் நிறத் தாமரை என்று சொல்லலாம்; மஞ்சள் நிறத்தையே பொன்னிறமென்றும் சொல்வார்கள். அந்தக் குளத்தில் பல மஞ்சள் தாமரைகள் இருந்தன.

எங்கும் காணாத அருமையான மஞ்சள் தாமரையை அன்று மதுரையிலே அன்பர்கள் கண்டு வியப்படைந்து, பொற்றாமரை!" என்று போற்றியிருக்கலாம் அல்லவா ? ஹக்கலாவில் உள்ள மஞ்சள் தாமரை பொற்றாமரையாகவே எனக்குத் தோன்றியது. அதற்குப் பூந்தோட்ட அதிகாரிகளும், மர நூல் வல்லாரும், அங்குள்ள மக்களும் என்ன பெயர் வைத்து வழங்குறார்களோ, எனக்குத் தெரியாது. அது நிச்சயமாகத் தாமரைதான். நீரில் படர்ந்திருக்கிறது. அதன் இலையும் தண்டும் தாமரையின் இலையும் தண்டுமே என்ப-