பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

இலங்கைக் காட்சிகள்


"காணிற் குமாரவே லாஎன்னும் அன்பரைக்
கரடிபுலி யானைசிங்கம்
காலிற் பணிந்தஞ்சி ஒடவும்"

என்று பாடியிருக்கிறார்,

இவ்வாறு அச்சமூட்டினாலும் அன்பர்கள் கதிர்காம வேலனைத் தரிசிக்க வருவதை நிறுத்தவில்லை. பல இடையூறுகளுக்கு நடுவில் ஒரு காரியத்தைச் சாதிப்பதில் அதிக மதிப்பும் பயனும் அநுபவமும் இருக்கின்றன. ஆயிரக்கணக்காக மக்கள் இங்கே வந்து கொண்டுதான் இருந்தார்கள். "அரோகரா! அரோகரா!" என்று முழக்கம் செய்துகொண்டே இந்தக் காட்டு வழியில் நடந்து சென்றார்கள். அந்த ஒலியைக் கேட்டுக் கேட்டு அங்கே வாழும் மக்களும் 'அரோகரா!" என்று எதிரொலித்தார்கள். கதிர்காமத்துக்கு யார் போனாலும் 'அரோகரா’ என்ற முழக்கத்தை எழுப்பினார்கள். இந்தப் பழக்கத்தால், போகிறவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கே இருக்கிறவர்கள் சொல்வதை நிறுத்துவதில்லை. அங்குள்ள மரமும் மண்ணும் கல்லும் கரடுங்கூடத்தான் 'அரோகரா'ச் சத்தத்தை எதிரொலிக்கும். அதைக் கேட்க நமக்குக் காதில்லை; அதுதான் வேறுபாடு.

திஸமாராவிலுள்ள டகோபா கதிர்காம வேலன் திருக்கோயிலுக்கு வழிகாட்டும் அடையாளத் தம்பமாக நிற்கிறது; பல திசைகளிலிருந்தும் வரும் மக்களுக்குக் கதிர்காமம் அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஊட்டும் கலங்கரை விளக்கமாக நிலவுகிறது. திஸமாராவில் ஒரு பெரிய ஏரியும், அதன் கரையில் வருவார் தங்குவதற்கும் உணவு கொள்வ-