பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிர்காமம்

133

தற்கும் உரிய விடுதி ஒன்றும் உள்ளன. அங்கே கிடைக்கும் உணவு எப்படியிருந்தாலும், சட்டி நிறையத் தரும் தயிர் மிக மிகச் சுவையுள்ளது.



திஸமாராவை விட்டுப் புறப்பட்டோம். கதிர்காமக் கோயிலைப் பற்றி நான் சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அன்பர்கள் கற்பனையைக் கலந்து கூறும் செய்திகளையும் கேட்டிருக்கிறேன். எல்லாம் சேர்ந்து விளங்காத ஒரு மயக்கத்தை உண்டாக்கி இருந்தன. "பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கோயிற் கூரையை வேய்வார்கள். அப்போது அதைப் பிரிப்பவன் இறந்துவிடுவான்" என்பது ஒரு கதை. " உள்ளே இன்னது இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. உள்ளேயிருந்து ஒரு தட்டு வரும். அதில் தேங்காய் பழம் வைத்தால் மறுபடியும் உள்ளே போகும். சிறிது நேரம் கழித்து உடைத்த தேங்காய் மூடிகளும் பழமும் வரும். அவை அப்படி வருவதற்குக் காரணம் யாருக்கும் தெரியாது."-இது ஒரு கற்பனை. "சிங்களவர்களே இங்கே பூசை செய்கிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளே ஒருவன் பூசை செய்வான். அப்புறம் அவன் இறந்துவிடுவான். அவனுக்குப் பதிலாக மற்றொருவன் வருவான்."- இது ஒரு கட்டுக் கதை.

இத்தனையிலும் நான் பொதுவான உண்மை ஒன்றை உணர்ந்தேன். 'கதிர்காமக் கோயிலில் ஏதோ மூடுமந்திரம் ஒன்று இருக்கிறது. அது யாருக்கும் விளங்கவில்லை. விளங்காத இரகசியத்தைப் பற்றிப் பல பல வதந்திகளைப் பரப்புவது மனித இயல்பு.