பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

இலங்கைக் காட்சிகள்

பூசகர் கதவை மூடிக்கொண்டு போய்விட்டார். நாங்கள் சொல்லி அனுப்ப, அவர் வந்து கதவைத் திறந்தார்.

கதவைத் திறந்தவுடன் உள்ளே பக்தர்கள் நின்று தரிசிக்கும் இடம் இருக்கிறது. பத்தடி அகலமும் இருபதடி நீளமும் இருக்கலாம். அங்கே பெரிய குத்துவிளக்குகளும் தீபச் சட்டிகளும் இருக்கின்றன. அதற்கப்பால் உயர்ந்த மேடைமேல் கர்ப்பக்கிருகம் இருக்கிறது. அதன் வாசலில் திரையிட்டு மறைத்திருக்கிறார்கள். அந்த வாசலுக்குப் படிகள் இருக்கின்றன. கர்ப்பக்கிருகத்தின் கதவுகூட நமக்குத் தெரியாது. திரையைத்தான் காணலாம். அந்தத் திரையில் முருகன் உபய நாச்சியாரோடும் மயிலின் மேல் வீற்றிருக்கும் ஓவியம் இருக்கிறது. அந்தத் திரையை இக்காலத்தில் யாரோ உதவியிருக்கிறார்கள். உபயஞ் செய்தார் இன்னர் என்ற குறிப்பும் திரையின் ஓரத்தில் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதற்குப் பின்னே சில திரைகள் இருக்கின்றன. அவை அவ்வக் காலத்தில் அன்பர்கள் உதவியவை போலும்!

பூசை செய்கிறவர்கள் அந்தத் திரையின் முன் நின்று தூபதீபம் காட்டுகிறார்கள்; அர்ச்சனை செய்கிறார்கள், வழிபடும் பக்தர்களும் அந்தத் திரையைக் கண்டு களிப்பதோடுதான் நிற்கிறார்கள். எந்தக் காலத்திலும் திரையை அகற்றுவதே இல்லை. திரையைக் கண்டவர்களையன்றி, திரைக்குப் பின் என்ன இருக்கிறது என்று அறிந்தவர் யாரும் இல்லை. கர்ப்பக் கிருகத்துள் என்ன இருக்கிறது என்ற புதிரை விடுவிப்பவரும் இல்லை. மூன்று கலசங்கள் கூரையின் மேல் இருப்பதனால் மூன்று பகுதிகள் இருப்பது தெரி-