கண்டிமா நகர்
83
யும்பிரிட்டிஷ் அரசைச் சார்ந்துவிட்டது. கண்டியரசர் சிங்காதனம் இப்போது கொழும்புக் காட்சிச் சாலையில் இருக்கிறது.
கண்டி மத்திய மாகாணத்தின் தலைநகரம். இலங்கை ஒன்பது மாகாணங்களால் ஆனது. அவற்றில் மலைகள் அடர்ந்திருக்கும் மத்திய மாகாணம் கண்டி, மாத்தளை, நுவரா எலியா என்ற மூன்று பகுதிகளை உடையது. இந்த மாகாணம் முழுவதும் இயற்கையெழிலரசியின் நடன மாளிகை. மலைகள் யாவும் இலங்கைக்குப் பொன்னை வாங்கித் தரும் நிதிநிலையங்கள். தேயிலையும் ரப்பரும் இங்கே பயிராகின்றன. கோக்கோவும் மிளகும் விளைகின்றன. உணவுப் பொருளை அதிகப் பணம் கொடுத்து வெளிநாட்டிலிருந்து வாங்கி இலங்கை அரசாங்கத்தார் மக்களுக்கு விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள். அதற்கு இரண்டு காரணங்கள்: முதல் காரணம், நெல் விளைய இடமின்றித் தேயிலை, ரப்பர் என்ற உருவத்தில் பொன்னையே விளைக்கிறார்கள்.[1] இரண்டாவது, நெல்லுக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் கொடுத்து வாங்கும் செல்வம் அங்கே இருக்கிறது. அப்படி இருக்கும்போது காசு கொடுத்து நெல்லை வாங்குவதனால் என்ன குறைந்து போயிற்று? இரும்பும் நிலக்கரியுமே விளையும் இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு உணவு வகையில் ஏதாவது குறைவு இருக்கிறதோ? இலங்கையும் அப்படித்தான் பணப் பண்டங்களை விளைவித்துப் பிற நாட்டுக்கு அனுப்பிப் பொன்னைச் சேர்க்கிறது; பிற நாட்டிலிருந்து உணவுப் பண்டங்களை வாங்குகிறது.
- ↑ இப்போது நெல் விளைவிக்கும் திட்டங்களை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.