பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிகிரிக் குன்றம்

 89

ராக்கிக் கொண்டு அரசாண்டார்கள். அப்படி ஆண்டவர்களில் தாதுசேனன் என்பவன் கி. பி. 460 முதல் 478 வரையில் அநுராத புரத்தில் ஆண்டான். அவனுக்கு அரசியினிடமாக மொக்கல்லானன் என்பவன் பிறந்தான்; வேறு ஒரு மனைவி மூலமாகக் கஸ்ஸபன் பிறந்தான். தாதுசேன மன்னனுக்கு ஒரு மகளும் பிறந்தாள். மன்னன் அவளைத் தன் தங்கையின் மகனுக்கு மணம் புரிவித்து அவனைத் தன் படைத் தலைவனாக வைத்துக் கொண்டான்.

படைத்தலைவனுடைய இல் வாழ்வில் சிறிது கலாம் மூண்டது. அரசனுடைய மகள் அவனை அவமதித்தாள். அவன் அவளை அடித்தான். இந்தக் கொடுமையை அவள் தன் தந்தையிடம் முறையிட்டுக் கொண்டாள். தாதுசேனனுக்குக் கோபம் மூண்டது. இதற்குக் காரணம் மாமியாரின் கொடுமையாக இருக்கலாம் என்று எண்ணினானே என்னவோ, தன் மகளின் மாமியாராகிய தன் தங்கையை உயிரோடு எரித்துவிட்டான். தாதுசேன மன்னன் செய்த இந்தக் கொடும்பாவத்தைத் தாங்க முடியாத படைத்தலைவன் எப்படியாவது இந்தப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று உறுதி பூண்டான். தானே ஒன்றும் செய்ய இயலாதாகையால், மன்னனுடைய மக்களில் ஒருவனாகிய கஸ்ஸபனைத் தூண்டிவிட்டான். "நீ மன்னனுக்கு மகன் என்று பெயரளவிலே இருக்க வேண்டியவனே. உன் தாய் குலத்திலே பிறந்தவள் அல்ல என்று மன்னனும் பிறரும் இழிவாக எண்ணுகிறார்கள். அரசியின் பிள்ளையாகிய மொக்கல்லானன் தான் அரசனானவன். நீ பிறந்தும் பயனில்லாமல் வாழப் போகிறாய்” என்றான்.