பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

9

உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவி செய்ததாகுமல்லவா ? இப்படியே ஒவ்வொருவரும் செய்தால் அதாவது வெளிநாட்டுக்குப் போய் ஒருவார உணவை மீத்தால் நமது உணவு மந்திரி முன்ஷி மிகவும் குஷியடைந்து நம்மை வாழ்த்த மாட்டாரா? நாம் திரும்பி வரும்போது ஸ்ரீ ரோச் விக்டோரியா நமக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க மாட்டாரா?

எனவே, வெளிநாட்டுக்குப் போவதன் மூலம் தமிழ் நாட்டுக்குத் தொண்டு செய்வது என்று தீர்மானித்தேன். எந்த வெளிநாட்டுக்குப் போவது என்று யோசித்த போது முதலில் கொரியா ஞாபகம் வந்தது. உடனே தளபதி மக் ஆர்தருக்கு ஒரு தந்தி கொடுத்தேன். “உதவிக்குப் புறப்பட்டு வரத் தயார்; உடனே ஒரு ஸூபர் போர்ட் பாம்பர் விமானம் அனுப்பவும்” என்று. “விலாசதார் அகப்படவில்லை” என்று தந்தி திரும்பி வந்துவிட்டது! அடுத்தபடியாக நமது அண்டைநாடாகிய இலங்கையை நினைத்துக் கொண்டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, “பத்தாயிரம் டன் அரிசி கடன் கொடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது சக்கரம் சுழன்று, இலங்கை இந்தியாவுக்கு அரிசிகடன் தருவதாகச் சொல்லுகிறது. இந்த அதிசயமான நிலைமையின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா? உண்மையாகவே மனமிரங்கி இலங்கை மந்திரிகள் அரிசி கொடுக்கிறார்களா? அல்லது “அழுகிய வாழைப் பழத்தை மாடுகூடத் தின்னாவிட்டால் புரோகிதருக்குத் தானம் கொடுத்துவிடு!” என்று