பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இலங்கையில் ஒரு வாரம்

களில் அதைப் பற்றிச் சொல்லக்கூடாது என்றால் வேறு என்னத்தைச் சொல்வதற்கு இருக்கிறது?

எனவே, இலங்கைக்குச் சென்று யாழ்ப்பாணத் தமிழர்களுக்குச் ‘சமுகம் அளித்து’ விட்டு வருவது என்று தீர்மானித்து, அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பித்தேன். இலங்கைக்குப் போக ஒழுங்கு செய்வதென்பது சாமான்ய காரியம் அல்ல. பாஸ்போர்ட் வாங்க வேண்டும் ; விஸா வாங்க வேண்டும். ‘பாஸ் போர்ட்’டுக்கும் ‘விஸா’வுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றி ஆராய்ந்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். இன்னும், பண்டைக்காலத்தில் இலங்கையை வெற்றி கொள்ளச் சென்ற வீரத் தமிழர்களைப் போலவே உடம்பில் குத்துக் காயங்களுடன் புறப்பட வேண்டும். அம்மை ஊசி இரண்டு இடத்தில் குத்திக் கொள்ள வேண்டும்; காலரா ஊசி இன்னும் இரண்டு இடத்தில் குத்திக் கொள்ள வேண்டும்.

அம்மை ஊசி என்னை அப்படி ஒன்றும் தொந்தரவு செய்துவிடவில்லை. இலேசாக விட்டு விட்டது. ஆனால் காலரா ஊசி குத்திக்கொண்ட அன்று கொஞ்சம் சுரம் வந்திருந்தது. ஊசி குத்திய டாக்டரை டெலிபோனில் அழைத்துச் “சுரம் வந்திருக்கிறது!” என்றேன். “சும்மா வரட்டும் ; பரவாயில்லை!” என்றார். “உமக்குப் பரவாயில்லை ; எனக்குப் பரபரப்பா யிருக்கிறதே!” என்றேன். “அப்படித்தான் கொஞ்சம் பரபரப்பாயிருக்கும். காலரா ஊசியே அப்படித்தான். அதற்குக் கொஞ்சம்கூடப் புத்தியே இல்லை. தராதரம் தெரிவதில்லை. எழுத்தாளர் — பத்திராதிபர் என்றுகூடப் பயப்படாமல் கொஞ்சம்