பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

13

தொந்தரவு கொடுக்கும். ஆனால் ஒரு நாளில் அது போய்விடும்!” என்றார் டாக்டர்.

“அப்படியா செய்தி? இருக்கட்டும்! இந்தக் காலரா ஊசியைப் பற்றி ஒரு தடவை வெளுத்து வாங்கிவிட வேண்டியது தான்!” என்று முடிவு செய்தேன்.

ஆனால், காலரா ஊசியினால் ஏற்பட்ட ஒரு நன்மை அதைப் பழிவாங்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளச் செய்தது.

சுரத்துடன் அறையில் படுத்திருந்தபோது வெளியில் யாரோ சிலர் வந்தார்கள். “கல்கி இருக்கிறாரா?” என்று விசாரித்தது என் காதில் விழுந்தது. பதில் கூறிய பிள்ளை “இருக்கிறார்; ஆனால் அவருக்குக் காலரா இனாகுலேஷன்...” என்று சொல்வதற்குள், வந்தவர்கள், “சரி, சரி! பிற்பாடு வந்து பார்த்துக் கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்கள். வந்தவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்பிச் சென்றதை அதற்கு முன் நான் அறிந்ததேயில்லை! “காலரா” என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஓட்டம் பிடித்தார்கள்!

இதை யெல்லாம் இங்கே நான் விவரமாக எடுத்துக் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவெனில், வருகிற 1951-ம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டிலிருந்து தமிழன்பர்கள் பலர் இலங்கை போக வேண்டிய அவசியம் ஏற்படும். மதுரையிலும் திருவாரூரிலும் கோயமுத்தூரிலும் நடந்தது போன்ற மாபெரும் தமிழ்த் திருவிழா அடுத்த முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற விருக்கிறது. அந்த விழாவுக்குப் போக விரும்பும் தமிழ் அன்பர்கள் இப்போது முதலே பிரயாண வசதிகளுக்கு ஒழுங்கு செய்யத் தொடங்குவது நலமாயிருக்கும்.