பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

29

இலங்கைக்குச் சுதந்திரம் வந்தபோது சிங்கள மந்திரிகள் அதுவரை அரசாங்க உத்தியோகத்திலிருந்தவர்களுக்குச் சுதந்திரம் அளிக்க முன் வந்தார்கள்! “உபகாரச் சம்பளத்துடன் விலகிக் கொள்ள விரும்புகிறவர்கள் விலகிக்கொள்ளலாம்” என்றார்கள். அச் சமயம் பார்த்து உத்தியோக விலங்கை உடைத்துக்கொண்டு வெளியேறியவர்களில் ஸ்ரீ அருள் நந்தி ஒருவர். தற்சமயம் இலங்கை சர்வகலாசாலையில் தத்துவப் போதகராயிருந்து வருகிறார்.

பேராசிரியர் அருள் நந்தி அவர்களை அறிவுக் களஞ்சியம் என்று கூறுவது மிகையாகாது. நவீன மேனாட்டுக் கல்வியில் தலை சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பழந்தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்து கற்றவர். எவ்வளவுக்குப் படித்தவரோ, அவ்வளவுக்கு அடக்கம் வாய்ந்தவர். “நிறைகுடம் தளும்பாது” என்பதற்கு ஸ்ரீ அருள் நந்தி பிரத்யட்ச உதாரணமாவார். இவ்வளவு அடக்கம் வாய்ந்தவராயினும், அவருடைய உள்ளத்தில் பொங்கும் தமிழன்பை வெளியிடச் சந்தர்ப்பம் நேரும்போது அவருடைய அடக்கம் பறந்துவிடுகிறது. கொழும்பு தமிழ்ச் சங்க விழா இரண்டு தினங்கள் நடந்து முடியப் போகும் தறுவாயில் இவர் சில வார்த்தைகள் கூறினார். “இளம் பிராயத்தில் நான் ஒரு கவி பாடினேன். அதைக் கேளுங்கள்”! என்று ஆரம்பித்தார். கவி என்ன என்பது எனக்கு ஞாபகம் இல்லை. அதன் கருத்தை மட்டும் சொல்கிறேன்.

ஸ்ரீ அருள்நந்தி இந்த உலக வாழ்க்கையிலுள்ள துன்பங்களைக் கண்டு கலங்கினாராம். மும் மலங்களுக்கு இடமாகிய இந்தப் பிறவியை எதற்காக அளித்தாய் என்று இறைவனிடம் முறையிட்டாராம். எப்படியாவது