பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

31

யின் ஆதி குடிகள். அப்படி நாங்கள் வெளியிலிருந்து வந்திருக்கும் பட்சத்தில் வடக்கிலிருந்து வந்தவர்கள் அல்ல. இலங்கைக்குத் தெற்கே லமூரியா கண்டம் கடலில் மூழ்கிய போது அங்கிருந்து கிளம்பி வந்தோம். சிலர் இலங்கையில் தங்கினோம். சிலர் தமிழகத்துக்குப் போனோம். எப்படியும் முதலில் இலங்கைக்கு வந்தவர்கள் நாங்கள் தான்!” என்று வித்வான் கனகசுந்தரம் சக்கைப் போடு போட்டார். அவரை யார் மறுத்துச் சொல்ல முடியும்? முடியவே முடியாது. லமூரியா கண்டம் இலங்கைக்குத் தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஏனெனில் லமூரியா கண்டம் இருந்திரா விட்டால் அது எப்படி முழுகியிருக்க முடியும்? முடியாது தானே ! எப்போது லமூரியா கண்டம் கடலில் மூழ்கிற்று என்று ஏற்பட்டதோ, அதற்கு முன்னால் வெளியே அது இருந்திருக்கத்தானே வேண்டும்!

ஆவேசமும் ஆத்திரமும் உள்ளவர்கள் தான் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும். வித்வான் கனகசுந்தரம் அவர்களிடம் இந்தப் பண்புகள் இருக்கின்றன. அதோடு நிர்வாகத் திறமையும் இருக்கிறது. தமிழ்ச் சங்க ஆண்டு விழாவை அவர் இவ்வளவு சிறப்பாக நடத்தியதே அவருடைய திறமைக்குச் சான்றாகும். தமிழ்த்தாயை இலங்கையிலிருந்து ஓட்டி விடலாம் என்று யாராவது கனவு கண்டிருந்தால் அது இனி ஒருக்காலும் பலிக்கப் போவதில்லை. ஏனெனில் தமிழ்த் தாய்க்குக் கொழும்பு நகரில் ஒரு நிலையான வாசஸ்தலம் ஏற்படுத்துவதற்கு வித்வான் கனகசுந்தரம் ஏற்பாடு தொடங்கிவிட்டார். கடன் வாங்கி நிலம் வாங்கியாகி விட்டது. நிலத்துக்காக வாங்கிய கடனை அடைத்து விட்டுப் பிறகு தமிழ்த் தாய்